உத்தரப் பிரதேசத்தில் கொடூரத்தின் உச்சத்தில் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலன் மாவட்டத்தில் உள்ள ஆட்டா கிராமத்தில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, கடந்த 31 ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து, கடைக்கு வெளியே சென்றுள்ளார்.
இந்நிலையில், வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் அச்சமடைந்து போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இதனையடுத்து கடந்த 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஜான்சி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், மாயமான சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கண்கள் தோண்டியெடுக்கப்பட்ட நிலையில் கொடூரத்தின் உச்சமாகக் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார்.
சிறுமியின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அத்துடன், போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் அஹிர்வாரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகளும், பாலியல் வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.