சென்னையில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் வசித்து வந்த ராணுவ அதிகாரி பிரவீன்குமாருக்கும், அவருக்குக் கீழ் பணியாற்றிய ரைபிள் மேன் ஜெக்தீருக்கும் இடையே அடிக்கடி பணி நிமிர்த்தமாக பிரச்சனை எழுந்துள்ளது.

Chennai army officer killed Gn

இந்நிலையில், ரைபிள் மேன் ஜெக்தீர் நேற்று பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ராணுவ அதிகாரி பிரவீன்குமார், அவரை அழைத்து கடுமையாகத் திட்டியதாகவும், இதனால் இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அதிகாலை 3.30 மணி அளவில் ராணுவ அதிகாரி பிரவீன்குமார் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ரைபிள் மேன் ஜெக்தீர், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Chennai army officer killed Gn

இதனிடையே அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்த துப்பாக்கி சத்தம் கேட்ட நிலையில், அக்கம் பக்கத்தில் குடியிருந்த சக ராணுவ வீரர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, இருவரும் குண்டு துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளனர். இதனையடுத்து, இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ராணுவ வீரர்கள் இருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.