சுமார் 10 வருடங்களுக்கு முன்பு டாட்டூ போட்டுக்கொள்வது, மேல்தட்டு வர்க்கம் சார்ந்ததாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று பெண்கள் முதல் ஆண்கள் வரை தங்களுக்கு விருப்பமான படங்கள், நபர்களின் பெயர்கள், டிசைன்கள், வாக்கியங்களை பச்சை குத்திக் கொள்வது ஃபேஷனாகவே மாறிவிட்டது. நம் பாட்டி காலத்தில் பச்சை கலரில் பெயர்கள் மற்றும் கோலங்கள் டிசைன்களை கைகளில் பச்சை குத்தியிருப்பார்கள். 

அதன்பின்பு நமது அப்பா காலத்தில் எல்லாம் இந்த பழக்கம் மறைந்துவிட்டு, தற்போது  டாட்டூ மோகம் இன்றைய இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து வர்க்க மக்களுக்கும் ஏற்றவாறு டாட்டூ கடைகள் முளைத்து  விட்டது.


ஆசைக்காக டாட்டூ போட்டுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் டாட்டூ போட்டுக்கொள்ளும் போது பாதுக்காப்பை மறந்தால் ரொம்பவே தவறு தானே. டாட்டூ போட்டுக்கொள்ளும் ஐடியாவில் இருக்கிறீர்களா? உங்களுக்கு சில டிப்ஸ்.. 


டாட்டூ போட்டுக்கொள்ள முடிவெடுத்தவுடனே, என்ன டிசைன் என்று தான் முதலில் யோசிப்போம் அல்லவா? ஆனால், அந்த டாட்டூ தற்காலிகமாகவா அல்லது நிரந்தரமாகவா என்று முடிவு எடுக்க வேண்டும். நிரந்தரமாக என்று முடிவு எடுத்தால், அந்த முடிவு குறித்து கூடுதலாக சிந்திக்க வேண்டும். காரணம், நிரந்தர டாட்டூ போட்டுவிட்டு, அதை அழிக்க நினைக்கும் போது, கூடுதல் வலியை கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம்.


சரும பிரச்சனைகள் இல்லாதவர்கள்.. முதல்முறை டாட்டூ போட செல்லும் போது, சின்ன டிசைனில் தற்காலிக டாட்டூ போட்டுக்கொள்வது சிறந்தது. இது உங்களுக்கு செட் ஆனால், அடுத்த டாட்டூ குறித்து யோசிக்கலாம்.


சரும பிரச்சனைகள் இருப்பவர்கள், தோல் மருத்துவரை ஆலோசிக்காமல் டாட்டூ போட செல்ல கூடாது. மேலும் முக்கியமானது டாட்டூ குத்த பயன்படுத்தும் கருவிகள், ஊசி போன்ற உபகரணங்கள் எல்லாம் சுத்தமாக வைத்திருக்கிறார்களா என்பதை நன்கு கேட்டு ஆராய்ந்து கொள்ளுங்கள்.


டாட்டூ போட்ட பிறகு அலர்ஜி, அதிக வலி, அரிப்பு போன்றவை ஏற்பட்டால், சில தினங்களில் தானாக சரியாகிவிடும் என நினைத்து தாமதிக்காமல் தோல் மருத்துவரை அணுக வேண்டும். 
டாட்டூவை அழிக்க லேசர் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் தான் நிரந்தர டாட்டூகளை அழிக்க முடியும். எப்போது  வேண்டுமானலும் டாட்டூவை அழித்துக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் டாட்டூ போட்டு மீண்டும் மீண்டும் அழித்துக்கொண்டிருந்தால், அந்த பகுதியில் தோல் பாதிக்கப்பட்டு வெள்ளையாக மாறிவிடும். மேலும் கலர் டாட்டூ போட்டிருந்தால் அதை அழிப்பது கூடுதல் சிரமம்.


நமது உடலில் டாட்டூவாக போட்டுக்கொள்ளும் டிசைன்களோ, வாக்கியமோ நம்மை அறியாமல் நம்மை வழிநடத்த கூடியது. அதனால் நேர்மறையான எண்ணங்களை கொடுக்க கூடிய டிசைன்களை தேர்வு செய்யுங்கள். முக்கியமாக டாட்டூ போடும் பொழுது  ஏற்பட கூடிய வலியை தாங்க தயாரான மனநிலையில் டாட்டூ ஷாப்க்கு செல்லுங்கள்.