கடத்தப்பட்ட இளைஞர் அடித்துக்கொல்லப்பட்டு உடல் போலீஸ் நிலையம் முன் வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு ரவுடி கும்பலுக்கு இடையேயான மோதல் சம்பவத்தில் 19 வயது இளைஞன் கடத்தி அடித்துக்கொல்லப்பட்டு உடல் போலீஸ் நிலையம் முன் வீசப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் பல ரவுடி கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் குறிப்பிட்ட இரு ரவுடி கும்பலுக்கு இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வந்துள்ளது.

கோட்டயத்தை சேர்ந்த ஜோமன் மற்றும் சூரியன் ஆகிய இரு ரவுடிகளுக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இருவரும் வெவ்வேறு ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள். ரவுடி சூரியனை கொலை செய்ய வேண்டும் என பல மாதங்களாக ரவுடி ஜோமன் திட்டமிட்டு வந்துள்ளான். ஆனால், சூரியன் தலைமறைவாகவே இருந்துள்ளார். இதற்கிடையில், ரவுடி சூரியன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில், இடுக்கி மாவட்டம் விமலகிரி பகுதியை சேர்ந்த ஷான் பாபு என்ற 19 வயது இளைஞனுடன் ரவுடி சூரியன் நிற்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. ஷான் பாபுவும் ரவுடி சூரியனும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பதிவை பார்த்த ரவுடி ஜோமன் தலைமறைவாக உள்ள சூரியன் எங்கு உள்ளான் என்பது ஷான் பாபுவுக்கு தெரியும் என நினைத்துள்ளார். மேலும், அவனை வைத்து ரவுடி சூரியனை தீர்த்துக்கட்டி விட்டலாம் என திட்டம் திட்டியுள்ளார். இதனை தொடர்ந்து, கடந்த 16-ம் தேதி இரவு ஷான் பாபுவை ஆட்டோவில் ரவுடி ஜோமன் கடத்திச்சென்றுள்ளார். தனது மகனை ஜோமன் கடத்திச்சென்றது குறித்து ஷான் பாபுவின் தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, கடத்தப்பட்ட ஷான் பாபுவை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் இந்நிலையில், கடத்திச்சென்ற ஷான் பாபுவிடம் தனது நண்பனான ரவுடி சூரியன் குறித்து ஜோமன் கேட்டுள்ளார். ஆனால், சூரியன் இருக்கும் இடம் தனக்கு தெரியாது என ஷான் பாபு கூறியுள்ளான். இதனால், ஆத்திரமடைந்த ரவுடி ஜோமன் கூர்மையான ஆயுதங்களால் ஷான் பாபுவை கொடூரமாக கொலை செய்துள்ளான். மேலும், கொல்லப்பட்ட ஷான் பாபுவின் உடலை தனது தோளில் சுமந்து வந்த ரவுடி ஜோமன் அதை கோட்டயம் கிழக்கு போலீஸ் நிலையம் முன்பு வீசியுள்ளார். அதன்பின் போதையில் இருந்த ரவுடி ஜோமன் ’நான் யாரையோ கொன்றுவிட்டேன்’ என்று போலீஸ் நிலையம் முன் நின்று சத்தமாக கூறிவிட்டு அங்கிருந்து நடத்து சென்றுள்ளான்.

rowdy

அதனைத்தொடர்ந்து அந்த சத்தமான குரலை கேட்ட போலீசார் போலீஸ் நிலையத்திற்கு வெளியே வேகமாக வந்து பார்த்தனர். அங்கு ஒரு இளைஞன் கொடூரமாக கொல்லப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், போதை மயக்கத்தில் தள்ளாடியபடி நடந்து சென்ற ரவுடி ஜோமனை சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும், போலீஸ் நிலையம் முன் வீசப்பட்ட உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேதபரிசோதனையில் கொல்லப்பட்ட நபர் ஷான் பாபு என்பது உறுதியானது. எதிர்தரப்பு ரவுடி கும்பலை சேர்ந்த நபரை தீர்த்துக்கட்ட எண்ணிய ரவுடி எதிரியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த புகைப்படத்தில் இடம்பெற்ற இளைஞரை கடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, தனது மகன் ஷான் பாபுவை ரவுடி ஜோமன் கடத்திச்சென்றது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தபோதும் அவர்கள் விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கொல்லப்பட்ட ஷான் பாபுவின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். ரவுடிகள் இடையேயான கோஷ்டி மோதலில் இளைஞர் கொலை செய்யப்பட்டு உடல் போலீஸ் நிலையம் முன் வீசப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.