டெல்லி திரிலோக்புரியைச் சேர்ந்தவர் அப்தாப் ஆலம். வாகன ஓட்டுநரான அப்தாப் ஆலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கிரேட்டர் நொய்டா சென்று விட்டு டெல்லி திரும்பி வரும்போது அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

உத்தர பிரதேச நெடுஞ்சாலையில் உயிரிழந்து கிடந்த அப்தாப் ஆலம் குறித்து, தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு போலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, கிரேட்டர் நொய்டாவில் கௌதம் புத்தா நகரில் பதல்பூர் காவல் நிலையத்தில், கொலையுண்ட அப்தாப் ஆலம் என்பவரின் மகன் முகமது சபிர் அளித்துள்ள புகாரின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதல் தகவல் அறிக்கையில், “அப்தாப் ஆலம், புலந்சாகரிலிருந்து திரும்பி வருகையில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு அப்தாப் ஆலம், தன் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் பேசுகையில், தான் பயணியை இறக்கிவிட்டு திரும்பி வந்துகொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

மேலும், ”சுமார் 8 மணியளவில் அவர் தத்ரி டோல் பிளாசாவிலிருந்து என்னை அழைத்து, அவருடைய ஃபாஸ்டாக் (FASTag) கட்டணத்தைச் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். நான் அதைச் செய்துவிட்டு அவரை அழைத்தபோது, அவர் என்னிடம் எதுவும் கூறவில்லை. அந்த சமயத்தில் காரில் அவர் வேறு சிலருடன் பேசிக்கொண்டிருப்பது என் காதில் விழுந்தது. அந்த நபர்கள் போதையில் பேசுவதுபோல் வாய் உளறலுடன் பேசினார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்தாப் ஆலம் வைத்திருந்த இரண்டு மொபைல் போன்களும், 3500 ரூபாய் பணத்தையும் காணவில்லை என்றும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

டெல்லி பல்கலைக்கழக மாணவரான சபிர், இந்த சம்பவம் தொடர்பாக கூறுகையில், “என்னுடைய தந்தையை, மது குடிக்கக் கட்டாயப்படுத்தி, அவரை “ஜெய் ஸ்ரீராம்” சொல்லக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள், பின்னர் அவரைக் கொன்றிருக்கிறார்கள்” என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “நான்பதிவு செய்துள்ள ஆடியோவில் இது தெளிவாக பதிவாகியிருக்கிறது. அவரும் “ஜெய்ஸ்ரீராம்” என்று சொல்லியிருக்கிறார். அதன் பின்னர் அவருடைய தொலைபேசி ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டுவிட்டது. அதனை நான் காவல்துறையினருக்கு அளித்திருக்கிறேன். ஆனாலும் இதனை குண்டர் கும்பல் கோணத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. என் தந்தை திரும்பிவரும்போது கிரிமினல் பேர்வழிகள் காருக்குள் வலுக்கட்டாயமாக சென்று, அவர் ஒரு முஸ்லிம் என்று தெரிந்தபின்னர் அவரைக் கொன்றிருக்கிறார்கள் என்றே தெரிகிறது. அவருடைய தலை, முகம், கழுத்து ஆகிய இடங்களில் காயங்கள் இருப்பதும் நன்றாகத் தெரிகிறது” என்று சபிர் கூறினார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கொலை செய்தவர்களைப் பிடித்துவிடுவோம் என்று கூறுகின்றனர்.

டாக்சி ஓட்டுநர் ஒருவரை “ஜெய் ஸ்ரீராம்” என கூறச்சொல்லி இந்துத்வா கும்பல் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.