கர்நாடகா மாநிலத்தில் சினிமா பாணியில், பட்டப்பகலில் கண் இமைக்கும் நேரத்திற்குள் இளம் பெண் ஒருவரை மர்ம நபர்கள் காரில் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் கோலார் பகுதியில் தான், இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் கோலார் பகுதியில் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும் ஒரு முக்கிய சாலையில், நேற்று முன் தினம் காலை 11.30 மணி அளவில், 2 பெண்கள் அந்த வழியாக நடந்து சென்றுகொண்டு இருந்தனர்.

அப்போது, அந்த வழியாக எதிர் புறத்தில் வேகமாக வந்த இன்னோவா கார் ஒன்று, அந்த பெண்கள் பக்கத்தில் வந்ததும் வேகம் குறைந்து மெதுவாக வரத் தொடங்கியது. அந்த இரு பெண்களும் காலை கடந்து செல்ல முற்பட்டபோது, எதிர் புறத்தில் வந்த அந்த கார், திடீரென்று நின்றுள்ளது. 

அப்போது, அந்த காருக்குள் இருந்து திடீர் என்று இறங்கிய 2 பேர், அந்த இரு பெண்களில் ஒரு பெண்ணை பின் பக்கமாக கட்டிப் பிடித்தார் போல், தூக்கினார். இதில், அந்த பெண் தன்னை விட்டு விடும் படி கத்தி கூச்சலிடவே, கூட வந்த பெண் என்ன நடக்கிறது என்று புரியாமல் திகைத்தப் போய் அங்கேயே நின்றுள்ளார். 

ஆனால், சினிமாவில் வரும் கடத்தல் காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு, கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த பெண்ணை, மர்ம நபர்கள் காரில் தூக்கிப் போட்டுக் கடத்திச் சென்றனர். இதனையடுத்து, அடுத்த நொடியே அந்த காரின் கதவு மூடப்பட்ட நிலையில், அந்த கார் அதிவேகமாகச் சீரி பாய்கிறது.

இதனைக் கடத்தப்பட்ட பெண்ணுடன் வந்த மற்றொரு பெண்ணும், அந்த வழியாக எதிர்புறத்தில் சென்றவர்கள் சத்தம் போட்டுக் கூச்சலிட்டனர். இதனையடுத்து, அங்கு நின்றிருந்தவர்கள் போலீசாருக்க தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து அங்கு விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

மேலும், இளம் பெண் கடத்தப்பட்ட இடத்தில் இருந்த ஒரு கடையில் இருந்த சிசிடிவி காட்சியை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த காட்சிகள் இதில் இடம் பெற்றிருந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், தனிப்படை அமைத்துக் கடத்தப்பட்ட பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, அந்த காரின் எண்ணை வைத்து, அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு சிசிடிவியை பார்த்து ஆய்வு செய்ததில், அந்த கார் சென்று சேர்ந்த இடம் கடைசியில் கண்டுபிடிக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, அந்த கார் துமகரு என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கடத்தப்பட்ட பெண் நேற்று அதிரடியாக மீட்கப்பட்டார். இதனையடுத்து, அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவரின் பெற்றோரிடம் அந்த பெண் ஒப்படைக்கப்பட்டார்.

அத்துடன், இளம் பெண்ணை கடத்தியவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கடத்தப்பட்ட பெண் அளித்த தகவலின் படி, கடத்தலில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சிவசங்கர், பாலாஜி, தீபக் ஆகியோர் தான் என்பது தெரிய வந்தது.

மேலும், கடத்தப்பட்ட பெண், “தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை” என்பதால், கடத்தியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. அத்துடன், தலைமறைவாக உள்ள கடத்தல்காரர்களை  போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, சினிமா பாணியில், பட்டப்பகலில் கண் இமைக்கும் நேரத்திற்குள் இளம் பெண் ஒருவரை மர்ம நபர்கள் காரில் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.