முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பா அறிவித்துள்ளார். மதியம் 2 மணிக்கு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார்.

கர்நாடகா மாநிலத்தில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, கடந்த 2019 ஜூலை 26 ஆம் தேதி பாஜக ஆட்சி அமைத்தது. 

அதன் படி, எடியூரப்பா 4 வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். 

எடியூரப்பா, முதலமைச்சராக பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கர்நாடக முதல்வர் பதவியை சற்று முன்பாக  ராஜினாமா செய்தார் எடியூரப்பா. 
கடந்த 16 ஆம் தேதி அன்று டெல்லி சென்றிருந்த எடியூரப்பா, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

கர்நாடகா மாநிலத்தில், எடியூரப்பா 4 வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டிக்கும் இந்த நிலையில், அவருக்கு 78 வயது ஆவதாக கூறப்படுகிறது. 

அதே நேரத்தில், 65 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  76 வயதான எடியூரப்பாவுக்கு மட்டும் வயது வரம்பில் இருந்து விலக்கு அளித்து அவருக்கு முதலமைச்சர் பதவியை பாஜக மேலிடம் வழங்கியதாக கூறப்பட்ட நிலையில், இவருக்கு 78 வயதாகி விட்டதால், பாஜக கட்சியின் கொள்கைப்படி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. 

அத்துடன், “எடியூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று, கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்களில் ஒரு பிரிவினர் பல மாதங்களாக போர்க்கொடி தூக்கி வந்தனர். 

இதனால், முதலமைச்சராக பதவி வகித்து வந்த எடியூரப்பாவுக்கு கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டது. ஆனாலும், அதனை தொடர்ந்து சமாளித்து வந்த  எடியூரப்பா, கடந்த 2 ஆண்டு காலம் எப்படியோ ஆட்சி பொறுப்பில் அமர்ந்து முதலமைச்சராக பயணித்து வந்தார்.

அவர் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ளும்போதே, “2 ஆண்டுகள் முடிந்ததும் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

அந்த நிபந்தனையை எடியூரப்பா ஏற்றுக் கொண்ட பிறகே, அவர் முதலமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டார் என்றும், அதன் படி, அவர் பதவி ஏற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள நிலையில், முதலமைச்சர் பதவியை எடியூரப்பா தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து, எடியூரப்பா இன்னும் சற்று நேரத்தில் அதாவது மதியம் 2 மணிக்கு ஆளுநரை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளிக்க உள்ளார். 

முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, தனது ராஜினாம குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பா அறிவித்த நிகழ்வு, தற்போது பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில், இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.