காதலித்து ஏமாற்றியதால், திருமணம் செய்துகொள்ளுமாறு எம்.எல்.ஏ வீட்டில் இளம் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் ஒடிஸா மாநிலத்தில் தான், இந்த பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஒடிஸா மாநிலம் பல்லாஹாரா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான முகேஷ் குமார் பால், தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே அவர், அப்பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, தேர்தலில் போட்டியிட்ட முகேஷ் குமார் பால், வெற்றியும் பெற்றார். இதனையடுத்து, அந்த இளம் பெண்ணிடம் பழைய படி பேசுவதைத் தவிர்த்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அவ்வப்போது மட்டும் அந்த இளம் பெண்ணிடம் பேசி வந்திருக்கிறார்.

குறிப்பாக, கடந்த 3 மாதம் வரை அவர்கள் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சட்ட மன்ற உறுப்பினர் முகேஷ் குமார் பாலும், “உன்னை நான் திருமணம் செய்துகொள்கிறேன்” என்று உறுதி அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், அதனைத் தொடர்ந்து அந்த இளம் பெண்ணுடன் பேசுவதை முகேஷ் குமார் பால், முற்றிலும் தவிர்த்த வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பல முறை விளக்கம் கேட்க முயன்றும், அவர் எந்த வித பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனாலும், விடாமல் தனது காதலில் போராடிய அந்த பெண், ஒரு கட்டத்தில் கடும் மன உளைச்சலுக்கு ஆளானா நிலையில், நேற்று இரவு அதிரடியாக பல்லாஹாரா சட்டப்பேரவைத் தொகுதியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் முகேஷ் குமார் பால், வீட்டிற்கு வந்து, அவரது பெற்றோருடன் நியாம் கேட்டுள்ளார். 

அப்போது, எம்.எல்.ஏ.வின் குடும்பத்தாரிடம், “என்னை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை, திருமணம் செய்வதாக உறுதியளித்திருந்த உங்கள் மகன், தற்போது என்னை முற்றிலும் தவிர்த்து வருகிறார்” என்று, குற்றம்சாட்டி உள்ளார்.

இதனையடுத்து, எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினர் அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தது. அத்துடன், அந்த இளம் பெண் தனது முடிவில் உறுதியாக இருந்து, அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

அதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவை உறுப்பினர் இரவு 9:30 மணிக்கு தனது வீட்டிற்கு வருகை தந்தார். அப்போது, அந்த பெண்ணிடம் பேசி, “வீட்டிற்கு செல்லும் படி” அறிவுறுத்தி இருக்கிறார். 

ஆனால், அந்த இளம் பெண்ணோ, “முடிவு தெரியும் வரை, நான் இங்கிருந்து நகரமாட்டேன்” என்று, உறுதிப்படத் தெரிவித்துள்ளார். 

அத்துடன், “என்னை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால், உங்கள் அரசியல் வாழ்க்கையை அழித்துவிடுவேன்” என்று, அந்த இளம் பெண் மிரட்டியதாகத் தெரிகிறது. 

அதனையடுத்து. அங்குள்ள பாலிபாசி காவல் துறையினருக்கு இந்த சம்பவம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் முகேஷ் குமார், தகவல் தெரிவித்தார்.

இது குறித்து உடனடியாக விரைந்து வந்த காவல் துறையினர், அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, அந்த இளம் பெண்ணை அழைத்துக்கொண்டு, கியோஞர் எனுமிடத்தில் இருக்கும் அந்த பெண்ணின் வீட்டிற்கு, அவரை அழைத்துச் சென்று அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.