வரதட்சணை தராத மருமகளை நிர்வாணமாக்கி, மாமியார் ஒருவர் தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஒடிசா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், தனது கணவருடன் வசித்து வந்தார்.

அந்த பெண்ணுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்திருந்தது. திருமணத்திற்குப் பிறகு, கணவன் வீட்டில் தனது மாமியார் மற்றும் மாமனாருடன் அந்த பெண் வசித்து வந்தார்.

அதே நேரத்தில், திருமணத்திற்கு போதுமான வரதட்சணை வழங்காத காரணத்திற்காக, மாமியாரால் அந்த பெண் தொடர்ச்சியாக கொடுமைப்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்.

இப்படியாக எவ்வளவு கொடுமைப்படுத்தியும், அந்த மாமியாரின் மருமகள் தனது பெற்றோரிடம் இருந்து எந்த ஒரு வரதட்சணையும் பெற்று வாராத காரணத்தால், கடும் கோபம் அடைந்த அந்த மாமியார், ஒரு கட்டத்தில் தனது மருகமளை அடித்து உதைத்து நிர்வாணமாக்கி, மீண்டும் தாக்கி உள்ளார்.

இந்த சம்பவத்தினை, அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இதனால், இந்த காட்சிகள் தற்போது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமா, அங்குள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் மருமகளைக் கொடுமைப் படுத்திய மாமியார் மீது புகார் அளித்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த அப்பகுதியைச் சேர்ந்த போலீசார், தற்போது விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக, அந்த மாவட்டத்தின் நிகராய் காவல் நிலைய ஆய்வாளர் காபுலி பாரிக் பேசும் போது, “பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம், பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், குற்றம்சாட்டப்பட்ட மாமியார் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும், தற்போது தலைமறைவாக இருக்கும் அவரை கைது செய்ய சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும்” தெரிவித்தார்.

அத்துடன், மருமகளை நிர்வாணமாக்கித் தாக்கி விட்டு, தற்போது தலைமறைவாக உள்ள அந்த பெண்ணை, போலீசாருடன் சேர்ந்து அந்த கிராம மக்களே மிகத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் அதிர்ச்சியும் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.