24 வயதான ஒரு பெண்ணை, தன் பாலின துணையான மற்றொரு பெண்ணுடன் வாழ அனுமதி அளித்து ஒடிசா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சின்மய் ஜீனா என்கிற சோனு கிருஷ்ணா ஜீனா என்ற 24 வயது இளம் பெண், கடந்த 2011 ஆம் ஆண்டில் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அப்போது, தன்னுடன் படித்த சக தோழி ஒருவருடன் அவர் நெருங்கிப் பழகி வந்துள்ளார். 

கல்லூரியில் படித்து வந்த போதே, பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கல்லூரியில் தன்பாலின தோழியோடு காதலை வளர்த்த அவர்கள் இருவரும், படிப்பை முடித்துவிட்டு, புவனேஸ்வர் நகரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். 

அப்போது, தன் அலுவலகத்தின் அருகிலேயே ஜீனா, வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்துத் தங்கி உள்ளார்.

குறிப்பாக, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இரு பெண்களும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இரு பெண்களும் தன் பாலின உறவை அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இப்படி, இரு பெண்களும் ஆண்கள் துணை இல்லாமல், தன் பாலின உறவில் இன்புற்று வாழ்ந்து வந்த நிலையில், இந்த தகவல் எப்படியோ தன் பாலின தோழியின் வீட்டிற்குத் தெரிய வந்துள்ளது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த தோழியின் தாய் மற்றும் அவரது தாய் மாமா ஆகியோர், கடந்த ஏப்ரல் மாதம் ஜீனா தங்கி இருந்த வீட்டிற்குச் சென்று, இருவரையும் தாக்கிவிட்டு, வலுக்கட்டாயமாக ஜீனாவின் தோழியை அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த ஜீனா, “என் பெண் இணையை மீட்டுத் தாருங்கள் என்று, அரசியலமைப்பின் 226 மற்றும் 227 வது பிரிவின் கீழ் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.  

மேலும், அந்த மனுவில், “என்னுடைய இணையின் தாயார், அவருக்கு வேறு ஒருவரைத் திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள்” என்றும், அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த ஆட்கொணர்வு மனுவானது, நீதிபதி எஸ்.கே. மிஸ்ரா மற்றும் நீதிபதி சாவித்ரி ரத்தோ ஆகியோர் அடங்கிய முன்பு விசாரணைக்கு வந்தது. 

விசாரணையின் போது, இளம் பெண் ஜீனாவின் இணை காணொலி காட்சி மூலம் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, “ஜீனா உடன் நான் செல்ல விரும்புவதாகவும், தாமதிக்காமல் எங்களைச் சேர்ந்து வாழ விடுங்கள்” என்றும், அவர் கூறினார்.

அத்துடன், “ஜீனா தனது இணையுடன் சேர, அந்த இணையின் பெற்றோர் அனுமதிக்க வேண்டும் என்றும், உள்நாட்டு வன்முறைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள படி, அந்த மனுதாரருடன் சேர அனைத்து உரிமைகளும் அந்த இரு பெண்களுக்கும் இருக்கிறது” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேபோல், ஜீனாவின் இணைக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று, காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு, அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.