காதலியை நண்பர்களுடன் சேர்ந்து காதலனே பலாத்காரம் செய்து கொலை செய்ததாகக் கூறப்பட்ட வழக்கில், சாதி மாறி காதலித்ததால் தந்தையே ஆணவக் கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

கர்நாடக மாநிலம் ராம நகர் மாவட்டம் மாகடி தாலுகா கூடூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெட்டேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவரின் மகள் 19 வயதான ஹேமலதா, அங்குள்ள மாகடியில் செயல்பட்டு வரும் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். 

அத்துடன், இளம் பெண் ஹேமலதா, பெட்டேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த வேறு சாதி இளைஞரான புனித் என்பவரைக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், அவர்கள் காதலர்களாக அந்த பகுதியில் பல இடங்களுக்குச் சென்று வந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஹேமலதாவின் காதல் விவகாரம், அவரது பெற்றோருக்குத் தெரிய வந்தது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த ஹேமலதாவின் பெற்றோர், கிருஷ்ணப்பாவும் அவரது குடும்பத்தினரும், காதலை கைவிடும் படி ஹேமலதாவிடம் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், காதலை கைவிட ஹேமலதா மறுத்ததாகத் தெரிகிறது. அவர் காதலில் உறுதிப்பட நின்று உள்ளார்.

இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி ஹேமலதா, தன் வீட்டில் இருந்து மாயமானார். இதனையடுத்து, 9 ஆம் தேதி “ஹேமலதாவை காணவில்லை” என்று,  அவரது குடும்பத்தினர் கூடூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாயமான ஹேமலதாவை 

தேடிவந்தனர். அதன் தொடர்ச்சியாக, கடந்த 10 ஆம் தேதி அங்குள்ள பெட்டேஹள்ளி கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் இளம் பெண் ஹேமலதா, அரை நிர்வாண கோலத்தில் உடல் அழுகிய நிலையிலும் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அங்கு விரைந்து ந்த போலீசார், இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், “யாரோ இளம் பெண் ஹேமலதாவை எங்கேயோ வைத்து கொலை செய்து விட்டு, உடலை மாந்தோப்பில் வீசிச்சென்றதும்” தெரிய வந்தது.

இளம் ஹேமலதா, அரை நிர்வாண நிலையில் மீட்கப்பட்டதால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் நினைத்தனர். இதன் காரணமாக, ஹேமலதா கொலை வழக்கில் அவரது காதலன் புனித் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், போலீசாரின் விசாரணையும் அதே திசையில் சென்றது.

இது தொடர்பாக தனிப்படையும் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில், “இளம் பெண் ஹேமலதா, வேறு சாதி இளைஞரான புனித்தை காதலித்ததும், அதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிய வந்தது. இதனால், இந்த வழக்கு, ஹேமலதாவின் தந்தை கிருஷ்ணப்பாவின் பக்கம்” திரும்பியது. 

ஆனால், போலீசார் விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்து உள்ளார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் மேலும் வலுத்தது. இதையடுத்து கிருஷ்ணப்பாவை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தங்கள் பாணியில் விசாரித்து உள்ளனர். அப்போது, 
“வேறு சாதி இளைஞரைக் காதலித்ததால், ஹேமலதாவை ஆணவக் கொலை செய்ததை” தந்தை கிருஷ்ணப்பா ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஹேமலதாவின் அத்தை மகனான 21 வயதான யோகேஷ், 17 வயது சிறுவன் ஒருவன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில், “கொலைப் பழியைக் காதலன் புனித் மீது போட முடிவு செய்து அதன் படியே, ஹேமலதாவை அரை நிர்வாண கோலம் ஆக்கியதாகவும், அதன் தொடர்ச்சியாக, புனித்தும், அவரது நண்பர்களும் சேர்ந்து ஹேமலதாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டதாகவும் யோகேஷ் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதும்” தெரிய வந்தது. இந்த சம்பவம், அந்த மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.