“பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா?” என்று, குற்றவாளியைப் பார்த்து நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மாகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மின்சார உற்பத்தி நிறுவனத்தில் பணி புரிந்து வரும் மோஹித் சுபாஷ் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரைப் பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் படி, மோஹித் சுபாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இப்படியான சூழ்நிலையில், “இந்த வழக்கில் போலீசார் என்னைக் கைது செய்யக் கூடாது” என்று, மோஹித் சுபாஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு, தொடர்பான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, இந்த மனுவை விசாரித்த நீதிபதி, குற்றவாளியைப் பார்த்து, “நீங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்வீர்களா?”  என்று கேள்வி எழுப்பினார். 

இதனால், திக்குமுக்காடிப் போன சம்மந்தப்பட்ட நபர் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்த நிலையில், “அதற்கான முயற்சியை நாங்கள் எடுப்போம்” என்றும், அவர் தரப்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் கூறினார்.

மேலும் பேசிய நீதிபதி, “நீங்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் போது, உங்களுக்கு நீங்கள் ஒரு அரசு அதிகாரி என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றும், கேள்வி எழுப்பினார்.

அத்துடன், “நாங்கள், உங்களை அந்த பெண்ணை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தவில்லை என்றும், நீங்கள் விரும்பினால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் என்றும், இல்லையென்றால் நாங்கள் அவளைத் திருமணம் செய்து கொள்ளும்படி உங்களைக் கட்டாயப்படுத்துகிறோம் என நீங்கள் கூறுவீர்கள்” என்றும், நீதிபதி குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய நீதிபதி, “நீங்கள் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினால், நாங்கள் உங்களுக்கு உதவ முடியும் என்றும், இல்லை என்றால், நீங்கள் உங்களது வேலையை இழந்து சிறைக்குச் செல்ல நேரிடும்” என்றும், நீதிபதி மிக கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மோஹித் சுபாஷ், அதற்குப் பதில் அளித்தார். அப்போது, “முன்னதாக, நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்று, இருந்தேன். ஆனால், அந்த பெண் அப்போது திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டாள். இப்போது எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. அதனால், இப்போது என்னால் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாது” என்று, கூறினார். 

அதன் தொடர்ச்சியாக, “என் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றும், நான் ஒரு அரசு ஊழியர் என்பதால் கைது செய்யப்பட்ட உடன் எனது வேலை பறிக்கப்படும் என்பது எனக்குத் தெரியும்” என்றும், அவர் பதில் அளித்துப் பேசினார். 

இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்ட நீதிபதி, “வரும் 4 நான்கு வாரங்களுக்கு மோஹித் சுபாரஷை கைது செய்யக் கூடாது” என்று, உத்தரவு பிறப்பித்தார்.

இதனிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.