“ஏப்ரல் மாதத்திற்குள் 50 ஆயிரம் உயிரிழப்புகள் இந்தியாவில் ஏற்படும்” என்று தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு உலக சுகாதார அமைப்பு விளக்கம் 
அளித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமாகப் பரவத் தொடங்கி இருக்கிறது. அதன் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 96,982 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பானது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையான 1,26,86,049 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று மட்டும் கொரோனா நோய்த் தொற்றால் 446 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு 1,65,547 ஆக உயர்ந்து உள்ளது.

இப்படியாக, இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு இது வரை இல்லாத அளவாக 1 லட்சத்து 3 ஆயிரத்தைத் தாண்டியது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டு வருகின்றன. 

தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை போட  அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறைக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்த நிலையில், “ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும்” என்று, உலக சுகாதார நிறுவனம் கூறியதாக வீடியோ ஒன்று வெளியாகிப் பரவி வருகிறது. இதனால், பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகள் எழுந்த நிலையில், அத்தகைய செய்திகளுடன் பரவிய வீடியோ போலியானது என்று, உலக சுகாதார அமைப்பு தற்போது மறுப்பு தெரிவித்து உள்ளது. 

அத்துடன், “இதில் உண்மை இல்லை என்றும், இது முற்றிலும் பொய்யான தகவல்” என்றும், உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்து உள்ளது.

அதே போல், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மராட்டியம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ளன.

முக்கியமாக டெல்லி, மராட்டியம், பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடகம், உள்பட 8 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகமாகக் காணப்படுகிறது. 
இதன் காரணமாக, மராட்டியத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கடுமையான பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. கொரொனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பொருளாதாரத்தைப் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர மாநில அரசுகள் தற்போது யோசித்து வருகின்றன. 

அந்த வகையில், டெல்லியில் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக, டெல்லி அரசு அறிவித்து உள்ளது. அதன் படி, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல், டெல்லியில் நேற்றைய தினம் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை டெல்லி அரசு தற்போது தீவிரப்படுத்தி உள்ளது. ஏற்கனவே, கொரோனா தடுப்பூசி மையம் 24 மணி நேரமும் செயல்படும் என்று டெல்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக சில அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.