மேற்கு வங்கம் மாநிலத்தில் 5 பேரால் 2 பழங்குடியின சிறுமிகள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அவமானம் அடைந்த அவர்கள் இருவரும் விஷம் அருந்தியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேற்கு வங்கம் மாநிலம் ஜல்பைகரி மாவட்டத்தைச் சேர்ந்த 16 மற்றும் 14 வயது உடைய 2 பழங்குடியின சகோதரிகள், கடந்த 4 ஆம் தேதி 5 பேர் கொண்ட உள்ளூர் இளைஞர்களால் கடத்தப்பட்டு, அவர்கள் இருவரும் மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார்கள்.

குறிப்பாக, 2 நாட்களாக அந்த இரு சிறுமிகளும் அடைத்து வைக்கப்பட்டுத் தொடர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதனையடுத்து, சிறுமிகள் இருவரையும் காணவில்லை என்று, அவரது பெற்றோர்கள் அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்து உள்ளனர். 2 நாட்கள் ஆகியும் 2 மகள்களும் கிடைக்காததால், அவரது பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று எண்ணியிருந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த பாலியல் பலாத்கார கும்பலில் இருந்து எப்படியோ தப்பித்து ஓடி வந்த அந்த 2 சிறுமிகளும், வீட்டிற்கு வந்து பிறகு அவமானம் தாங்க முடியாமல் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளனர்.

அந்த நேரம் பார்த்து வீடு திரும்பிய சிறுமியின் பெற்றோர், பிள்ளைகள் இருவரும் மிகவும் சோர்வாகக் காணப்பட்ட நிலையில், பயந்துபோய் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

அங்கு, சிகிச்சை அளிக்க முடியாமல், உயர் சிகிச்சைக்காக அருகில் உள்ள வட வங்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் இரு சிறுமிகளிடமும் விசாரித்து உள்ளனர். 

அப்போது, சகோதரிகள் இருவரும் தங்களுக்கு நடந்த கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறித்து எல்லாவற்றையும் தெளிவாகக் கூறி உள்ளனர். 

அத்துடன், அந்த கும்பலிடமிருந்து எப்படித்தப்பி வந்தோம் என்பதையும் அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் இருவருக்கும் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சகோதரிகளில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். அத்துடன், மற்றொரு சகோதரி உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு தற்போது தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், சிறுமிகள் இருவரையும் கடத்தி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரில் 3 பேரை அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். அத்துடன், தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, கடந்த மாதம் குறிப்பிட்ட இதே பகுதியில் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான நிலையில், அங்குள்ள ஒரு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.