கடந்த 19 ஆண்டுகளில் 4  நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியைச் சேர்ந்த ஹேமந்த் கோனியா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அதன் மூலம், “கடந்த 2000 - 2019 ஆம் ஆண்டு காலகட்டத்தில், பாலியல் பலாத்காரம் மற்றும் வன்கொடுமைகளுக்கு உள்ளான நபர்களுக்கான நிதி உதவியாக, மாநில அரசால் இது வரை 4 கோடியே 81 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது” என்பது தெரிய வந்தது.

அதே போல், “ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 17 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது” என்பதும், தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, “கடந்த 19 ஆண்டுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பதும்” தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்தது. 

முக்கியமாக, “கடந்த 19 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 956 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதும், இது மட்டுமல்லாது 19 ஆசிட் வீச்சு வழக்குகளும் பதிவாகி உள்ளதும்” இதன் மூலம் தெரிய வந்தது. 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஹல்த்வானியைச் சேர்ந்த ஹேமந்த் கோனியா இந்த பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பான அறிக்கையைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், “உத்தரகாண்ட் மாநிலத்தில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்றும், இது போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க மாநில அரசால் முறையான சட்டம் இது வரை கொண்டுவரப்படவில்லை என்றும், இதன் விளைவாகவே இது போன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் மற்றும் வன்கொடுமை சம்பவங்களும் மாநிலத்தில் அதிகரித்து வருவதாகவும்” அவர் வேதனை தெரிவித்தார்.

மேலும், “இது போன்ற ஒரு சூழ்நிலையில் குற்றவாளிகளுக்கு எதிராக மாநில அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, பாதிக்கப்பட்டோருக்கான நீதியை பெற்றுத் தர வேண்டும்” என்றும், ஹேமந்த் கோனியா வலியுறுத்தி உள்ளார். 

இந்த செய்தி, அந்த மாநிலத்தின் ஊடகங்களில் வெளியான நிலையில், அந்த மாநில மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன், இது தொடர்பான செய்தியை, அந்த மாநில மக்கள் இணையத்தில் பதிவிட்டு, விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில், இந்த செய்தியைப் பார்த்த பல பெண்களும், கடும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். 

இது தொடர்பான ஒரு பெரும் விவாதத்தை, உத்தரகாண்ட் மாநில ஊடகங்கள் மேற்கொண்டு வரும் நிலையில், சமூக வலைத்தளங்களிலும், இது தொடர்பான விவாதங்கள் சென்றுகொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.