உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ள நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இது வரை 39 பேர் அங்கு உயிரிழந்து உள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா மானிலத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கன மழையால் அங்கு பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அந்த மாநிலமே  தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. 

அத்துடன், அங்குள்ள கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு மிகப் பெரிய அளவில் ஏற்பட்டு அதன் பாதிப்புக்கள் கடுமையாக உள்ளன. 

இதனால், அங்குள்ள பல வீடுகள் மண்ணில் புதைந்தன. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து இருந்தது. எனினும், அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் தான், கேரளாவில் கனமழையால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை தற்போது 39 ஆக அதிகரித்து இருக்கிறது. 

அத்துடன், இந்த மழை வெள்ளத்தில் பலரும் காணாமல் போய் உள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணியை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கேரளாவில் இந்த மாதம் மட்டும் 135 சதவீதம் கூடுதலாக மழை பெய்து உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

அக்டோபர் 1 முதல்  19 ஆம் தேதி வரையில் இயல்பான மழை அளவு 192.7 மில்லி மீட்டராக இருக்கும் எனவும், ஆனால் நடப்பு ஆண்டு  435.5 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்து உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதே போல், உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழையால், அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கடுமையான அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டு உள்ளது.

மேலும், அந்த மாநிலத்தின் குமன் மாகாண பகுதிக்கு உள்பட்ட நைனிதா, சம்பவாட், அல்மொரா, பிதோரகர்க், உதம்சிங் நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவால் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அத்துடன், உத்தரகாண்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலசரிவில் 34 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மழை வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதே போல், கனமழை மற்றும் வெள்ளம், நிலச்சரிவில் பலரும் அங்கு மாயமாகியுள்ளதால், அவர்களை தேடும் பணிகள் தற்போது அங்கு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

அதே போல், உத்தரப் பிரதேசம் மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. அங்கு, பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனிடையே, உத்தரகாண்ட் கனமழை, வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக, உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று, அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.