ஆண்களை மிஞ்சிய பலே கில்லாடி பெண்.. 10 ஆண்டுகளில் 8 முதியவர்களைத் திருமணம் செய்து மோசடி..
By Aruvi | Galatta | Sep 05, 2020, 08:44 pm
உத்திர பிரதேச மாநிலத்தில் ஆண்களை மிஞ்சிய பலே கில்லாடி பெண் ஒருவர், கடந்த 10 ஆண்டுகளில் 8 முதியவர்களைக் குறிவைத்து மேட்ரிமோனியல் நிறுவனத்தின் உதவியுடன் திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திர பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த 66 வயதான கட்டுமான ஒப்பந்தக்காரரான கிஷோர், ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் எல்லாம் திருமணமாகி வாழ்க்கையில் செட்டில் ஆகி உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு தன் பிள்ளைகள் எல்லாம் தனித் தனியாகச் சென்ற நிலையில், தன் மனைவி உடன் வசித்து வந்தார். இதனையடுத்து, அந்த சில வருடங்களில் அவர் மனைவியும் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதன் காரணமாக, கிஷோர் மனைவியை பிரிந்த நிலையில், கடந்த சில வருடங்களாகவே தனிமையில் வாழ்ந்து வந்தார். இதனால், தனிமை அவரை வாட்டி எடுத்துள்ளது. இதனால், தனது கடைசிக் காலத்தில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று தீர்மானித்த அவர், இந்த வயத்திலும் திருமணம் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி, டெல்லியைச் சேர்ந்த மேட்ரிமோனியல் ஏஜென்சி வெளியிட்ட செய்தியைப் பார்த்து அதில் இருந்த ஒரு விளம்பரத்தில், “மூத்த குடிமக்கள் மற்றும் விவாகரத்து செய்யப்பட்ட நபர்களுக்கு உரியத் துணையைத் தேடித் தருவதாக” தெரிவித்திருந்ததை கவனித்துள்ளார்.
அதன் பின்னர், அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட கிஷோர், அதன் உரிமையாளர் மஞ்சு கன்னா என்பவரிடம்.. தனது திருமண ஆசை குறித்துக் கூறி உள்ளார். அதன்படி, “உங்களுக்கு ஏற்ற மணமகள் மோனிகா மாலிக் தான்” என்று கூறிய மேட்ரிமோனியல் ஏஜென்சியின் நிறுவனர் மஞ்சு கன்னா, அந்த பெண்ணை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, அடுத்த சில நாட்கள் அவர்கள் இருவரும் சந்தித்துப் பேசி வந்த நிலையில், அடுத்த சில வாரங்களில் அவர்கள் இருவருக்கம் திருமணம் ஆகி உள்ளது. அதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத்தில் கிஷோர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, கிஷோரின் வீட்டில் இருவரும் தம்பதிகளாகவே வாழ்ந்து வந்தனர்.
இதனையடுத்து, திருமணமான அடுத்த 2 மாதங்களிலேயே மனைவி மோனிகா, தன் கணவன் கிஷோரிடம் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த வீட்டிலிருந்து மாயமாகி உள்ளார். அதனால், கடும் அதிர்ச்சி அடைந்த 66 வயதான கிஷோர், சம்மந்தப்பட்ட மேட்ரிமோனியல் ஏஜென்சியை தொடர்பு கொண்டு முறையிட்டுள்ளார். ஆனால், அந்த ஏஜென்சியை சேர்ந்தவர்கள், கிஷோரை மிரட்டி உள்ளனர். அத்துடன், “உன் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்துவிடுவோம்” என்றும், கிஷோரை அவர்கள் மிரட்டி கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இதனையடுத்து, கிஷோருக்கு மோனிகாவின் முந்தைய கணவர்களைப் பற்றிய தகவலும் கிடைத்துள்ளது. அவர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அவர்களும், இப்படியே ஏமாற்றப்பட்டதும் தெரிய வந்தது. இதனால், தாம் திட்டமிட்டே ஏமாற்றப்பட்டோம் என்பதை அவர் உணர்ந்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்ட கிஷோர், அங்குள்ள காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிய மோனிகா மீது புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது, அந்த பெண் மோனிகா, கடந்த 10 வருடங்களில் இது போன்ற வயதானவர்களைக் குறிவைத்து 8 முதியவர்களை இதேபோன்ற பாணியில் ஏமாற்றியது திருமணம் செய்து, அதன் பிறகு அவர்களை மோசம் செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, ஆள்மாறாட்டம், மோசடி, திருட்டு, மிரட்டி பணம் பறித்தல், அச்சுறுத்தலால், கிரிமினல் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மோனிகா, அவருடைய குடும்பத்தினர் மற்றும் திருமண செய்ய ஏற்பாடு செய்த மேட்ரிமோனியல் ஏஜென்சி நிறுவனம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.