உத்திரப் பிரதேசத்தில் “ஆண் குழந்தையா?” என அறிய, கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்த கணவனின் கொடூர சம்பவத்தால், வயிற்றில் இருந்த ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில், அவரது மனைவியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிரமாகச் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவில் பழமையான விசயங்கள் எல்லாம் அடியோடு மாறி, தற்போது அதி நவீன உலகில் அனைவரும் பயணப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இப்படிப்பட்ட இந்த கால கட்டத்தில் கூட, இந்தியாவில் சில இடங்களில் இப்படியான முட்டாள் தனமான செயல்கள் அவ்வப்போது நடைபெறுவது வேதனையின் உச்சமாக இருக்கிறது. சிலர், அறியாமையின் உச்சமாக, அடிப்படை அறிவுகூட இல்லாமல் இதுபோன்று நடந்துகொள்வதால், சில நேரங்களில் உயிர் பழிகூட ஏற்படும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற இந்த சம்பவம்.

உத்திரப் பிரதேசம் மாநிலம் நெக்பூர் பகுதியில் தான், இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நெக்பூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத் தக்க பன்னலால் என்பவர், தன்னுடைய 35 வயதான மனைவியுடன் நன்றாகத் தான் குடும்பம் நடத்தி வந்தார். 

இந்த தம்பதிக்கு ஏற்கனவே 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இதனால், தனக்கு அடுத்து ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு உள்ளார். அதன்படியே, தற்போது 6 வது முறையாக பன்னலால் மனைவி கர்ப்பிணியானார்.

அதன்படி, இன்னும் சில வாரங்களில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்க இருந்த நிலையில், மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று திடீரென்று குழப்பம் அடைந்து உள்ளார்.

இதனால், அடுத்துப் பிறக்கப்போவது என்ன குழந்தை என்பதை முன் கூட்டிய தெரிந்துகொள்ள பன்னலால் முற்பட்டார். அதன் விளைவாக தன் மனைவியிடம் சண்டை போட்டு, வயிற்றில் வளரும் குழந்தையைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு வழியாக சம்மதம் வாங்கி உள்ளார்.

ஆனால், தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்யாமல், வீட்டில் வைத்தே ஒரு கூர்மையான ஆயுதத்தால் மனைவியின் வயிற்றை கிழித்துப் பார்த்து உள்ளார். இதனால், அவர் மனைவிக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு, கடும் அவதியுற்றுள்ளார்.

இதனால், பயந்துபோன பன்னலால், தன் மனைவியை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர அரசமாக அனுமதித்தனர். அங்கு அந்த பெண்ணுக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும், அந்த பெண்ணின் வயிற்றில் வளர்ந்த ஆண் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. வயிற்றில் வளர்ந்த அந்த சிசு பரிதாபமாக உயிரிழந்தது. இதனால், பன்னலாலின் ஆண் குழந்தை வாரிசு கனவு, கனவாகவே கரைந்து போனது.

அத்துடன், அந்த கருவை சுமந்த அந்த பெண்ணின் நிலைமை இன்னும் சீரியஸ் ஆகி உள்ளது. இதனால், அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கர்ப்பிணி மனைவியின் வயிற்றைக் கிழித்து, கருவில் இருப்பிது ஆணா? பெண்ணா? என்று பார்த்த கணவனை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், அந்த மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.