உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் “என் காதலியை அனுப்பி வையுங்கள்”  என்று, சிறுவனைக் கடத்தி மிரட்டல் விடுத்த வெளிநாட்டு காதலனால் பரபரப்பு ஏற்பட்டது. 

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கரேந்தா பகுதியில் தான், இந்த பரபரப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நான்ஹே என்ற இளைஞர், வெளிநாட்டில் தங்கி வேலைப் பார்த்து வந்தார்.

அப்போது, சமூக வலைத்தளங்கள் வழியாக, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் பிரக்யராஜ் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் அறிமுகம் ஆகி உள்ளார். இதனால், நான்ஹேவும் அந்த இளம் பெண்ணும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து சாட்டிங்கில் ஈடுபட்டு வந்தனர். 

இதனையடுத்து, அவர்கள் இருவரும் காதலித்து ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர்கள் இருவரும் தங்களது செல்போன் எண்ணையும் பரிமாறிக்கொண்டனர். இப்படி, செல்போனிலேயே அவர்கள் தங்களைக் காதலை வளர்த்து வந்த நிலையில், “இந்தியா வந்ததும், கண்டிப்பாக நான் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்” என்று நான்ஹே, அந்த இளம் பெண்ணிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆனால், நான்ஹே இந்தியா வருவதற்குள், அந்த இளம் பெண், தனது உறவினர் சல்மான் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த பெண் நான்ஹேவிடம் இருந்து சற்று விலகத் தொடங்கி உள்ளார்.

அந்த இளம் பெண்ணின் காதலை எப்படியோ தெரிந்துகொண்ட வெளிநாட்டு காதலன் நான்ஹே, “எப்படியாவது, தன் காதலியை தன்னிடம் வர வைக்க வேண்டும்” என்ற திட்டத்தோடே இந்தியா வந்திருக்கிறார்.

அதன்படி, இந்தியா வந்த நான்ஹே, தன் வீடு இருக்கும் பிரதாப்கார் பகுதிக்குச் சென்று, தனது நண்பர்களிடம் இது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், அங்குள்ள தில்தார் பகுதியைச் சேர்ந்த மௌயிமாவும் சேர்ந்து, அந்த இளம் பெண்ணின் தம்பியான ஜிஷானாவை, நான்ஹே கடத்தியதாகத் தெரிகிறது.

அந்த சிறுவனைக் கடத்திய பிறகு, அந்த இளம் பெண்ணின் தந்தைக்கு போன் செய்த நான்ஹே, “என் காதலியை அனுப்பி வையுங்கள். அப்போது தான், உங்கள் மகனை நான் விடுவிப்பேன்”  என்று, கூறி மிரட்டி இருக்கிறார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை கரேந்தா பகுதியைச் சேர்ந்த மன்சூர் அலி, இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் “என் மகனை கடத்திய நான்ஹே, எங்களது தூரத்து உறவினர்” என்றும், அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், புகார் தெரிவிக்கப்பட்ட அடுத்த 42 மணி நேரத்தில் தீவிரமான தேடலுக்குப் பிறகு, அங்குள்ள பிரயக்ராஜ் பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

மேலும், நான்ஹேவின் செல்போன் லொககேஷனை வைத்து, கரேலி பகுதியில் அவர்கள் இருப்பதையும் கண்டுபிடித்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.