“ஆளை அடிப்பதற்கு 5 ஆயிரம் ரூபாய், கொலை செய்ய 55 ஆயிரம் ரூபாய்” என்று, விலை பட்டியல் போஸ்டரை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவரால் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டு உள்ளது. 

கொரோனா வைரஸ் பெருந் தொற்று காரணமாக, பலரும் வேலை இழந்தும், வருமானம் இழந்தும் தவித்து வருகின்றனர். இதில், குறிப்பிட்ட சிலர், பலவிதமான குற்றச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவதாக, காவல் துறை தரப்பில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. அதற்கு சாட்சியாக விளங்குகிறது உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறிய இந்த சம்பவம். 

அதே நேரத்தில், இந்த கொரோனா காலத்தில், இந்தியாவிலேயே உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் அதிக அளவிலான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதாகவும், செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டு இருக்கின்றன. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ரவுடிசம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் செய்வதற்கான விலைப் பட்டியலை அடங்கிய ஒரு போஸ்டரை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த க்ரைம் விலைப் பட்டியலோடு இணைத்து துப்பாக்கியுடன் இருக்கும் தனது புகைப்படத்தையும் அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தார்.

இந்த விலைப் பட்டியல், பலருக்கும் பகிரப்பட்ட நிலையில், போலீசாரின் கவனத்திற்கும் இது சென்றது. இதனைப் பார்த்து போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர். அந்த விலை பட்டியலில், “மிரட்டலுக்கு ஆயிரம் ரூபாய், அடிப்பதற்கு 5 ஆயிரம் ரூபாய், அடித்து காயம் ஏற்படுத்துவதற்கு 10 ஆயிரம் ரூபாய், கொலை செய்வதற்கு 55 ஆயிரம் ரூபாய்” என அதில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அத்துடன், நிறைவான சேவை வழங்கப்படும் எனவும், அந்த இளைஞர், அந்த விளம்பரத்தில் உறுதியளித்து இருந்தார். 

குறிப்பாக, அந்த விளம்பரத்தில், தன்னுடைய தொலைப்பேசி எண்ணையும் அந்த இளைஞர் இணைத்து இருந்தார். இந்தப் பதிவு, சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலானது. இதனையடுத்து, அந்த இளைஞன் யார் என்று போலீசார் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த தீவிர தேடுதல் வேட்டையில் அந்த நபர், அங்குள்ள சவுகாடா கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் மகன் என்பதையும் கண்டு பிடித்தனர். 

இதனையடுத்து, போலீசார் அந்த இளைஞரை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோபியன் மாவட்டத்தில் வங்கி வேனிலிருந்து கொள்ளையர்கள் துப்பாக்கி காட்டி மிரட்டி 60 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். ஷோபியன் மாவட்டம் ஜாமியா மஸ்ஜித் பகுதியில் உள்ள வங்கிக்குச் சொந்தமான வேனில் இன்று பிற்பகல் நேரத்தில், கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர். அதன் படி, அங்கிருந்து 60 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்று உள்ளனர். இது குறித்து, வேனிலிருந்த ஓட்டுநர் மற்றும் ஊழியர்கள் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.