உத்திர பிரதேசத்தில் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளில் அதிகமானோர் படித்த பட்டாதாரிகள் தான் உள்ளதாக தேசிய குற்றப் பதிவு பணியகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், உத்திர பிரதேச சிறையில், பொறியியல் மற்றும் முதுக்கலை பட்டம் பெற்ற கைதிகள் தான் அதிகமாக உள்ளனர். உத்திரபிரதேசத்தை தொடர்ந்து அடுத்தபடியாக, மஹாராஷ்டிராவில் உள்ள சிறையில் தான் அதிகமான பட்டதாரிகள் உள்ளனர். மேலும், மூன்றாவது இடத்தில கர்நாடக சிறையில், அதிகப்படியான படித்த பட்டதாரிகள் சிறையில் உள்ளனர். தொழில்நுட்ப பட்டம் அல்லது பொறியியல் துறையில் டிப்ளோமா பெற்ற 3,740 கைதிகளில், 727 பேர் உத்தரபிரதேச சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் உள்ள சிறைச்சாலைகள் பொறியியல் பட்டம் பெற்ற 495 கைதிகள்உள்ளனர். கர்நாடக சிறைகளில் 362 கைதிகள் உள்ளனர். நாடு முழுவதும் முதுகலை பட்டம் பெற்ற மொத்தம் 5,282 பேர் கைதிகளாக சிறையில் உள்ள நிலையில், உ.பி. சிறையில் 2,010 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் (என்சிஆர்பி) 2019ல் ஆய்வு செய்த வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: `உ.பி., சிறையில் உள்ள 3,740 கைதிகளில், 727(20 சதவீதம்) பேர் பொறியியல் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்துள்ளனர். இதே பட்டப்படிப்பு முடித்தவர்கள் மஹாராஷ்டிரா சிறையில் 495 பேரும், கர்நாடக சிறையில் 362 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில், 5,282 பேர் பட்டப்படிப்பு டித்துள்ளனர். உ.பி., சிறையில் உள்ளவர்களில் 2,010 பேர் பட்டப்படிப்பு முடித்தவர்கள். நாடு முழுவதும் சிறையில் உள்ள 3,30,487 பேரில் 1.67 சதவீதம் பேர் முதுகலை பட்டதாரிகள். 1.2 சதவீதம் பேர் பொறியாளர்கள்'

ஏற்கெனவே பெண்களுக்கு எதிரான குற்றங்களில், ஒரே ஆண்டில் 59,853 சம்பவங்களுடன் உத்தரப்பிரதேசம்தான் முதல் இடத்தில் உள்ளது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், மத்தியப் பிரதேசம் இரண்டாம் இடத்திலும் உத்தரப்பிரதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. ஆசிட் தாக்குதலிலும் பாலியல் வன்கொடுமை முயற்சிகளின் எண்ணிக்கையிலும் உத்தரப்பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது.

மேலும் போக்ஸோ சட்டத்தின் கீழ், 7,444 வழக்குகளுடன் உத்தரப்பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிராவும் மூன்றாவது இடத்தில் மத்தியப் பிரதேசமும் உள்ளன. நிர்பயா, கத்துவா சிறுமி, ஹைதராபாத் பெண் மருத்துவர், உன்னாவ் சிறுமி என நாடு முழுவதும் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. ஆனால் இந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு சொற்பமாகவே தண்டனை கிடைத்துள்ளதாக கண்டனப் பதிவுகள் சமூக வலைதளங்கள் முழுக்க விவாதிக்கப்பட்டு வருகின்றன.

மாநில வாரியாக சிறையிலுள்ள பட்டப்படிப்பினர் (டிப்ளமோ முடித்தவர்கள் / முதுகலை பட்டதாரிகள்)

உத்திர பிரதேசம் - 727 / 2,010

மஹாராஷ்டிரா- 495 / 562

கர்நாடகா -362 /120

தமிழகம் -316 / 102

மத்திய பிரதேசம் -284 / 456

ராஜஸ்தான் -276 / 475

தெலுங்கானா- 213 /170

இது தொடர்பாக உபி., மாநில சிறைத்துறை டிஜி ஆனந்த் குமார் கூறுகையில், ``கைதாகியுள்ள பொறியியல் பட்டதாரிகளில் பெரும்பாலானோர் வரதட்சணை மரணம் அல்லது பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளனர். சிலர் மட்டுமே, பொருளாதார குற்ற செயல்களில் சிக்கியுள்ளனர். அவர்களின் கல்வித்தகுதி, சிறையில் தொழில்நுட்பத்தை உயர்த்த பயன்படுத்தப்படுகிறது. சிறையில் வானொலி நடத்தி வருகின்றனர். பலர், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளில் ஆசிரியர்களாகவும் மாறியுள்ளனர்" இவ்வாறு அவர் கூறினார்.