“இந்தியாவுக்குப் பயணம் செய்யும் போது மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று, அமெரிக்கா தங்கள் நாட்டுப் பயணிகளிடம் அறிவுறுத்தி உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் வட மாநிலங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு எதிராக மிக அதிக அளவிலான குற்றங்கள் நடைபெற்று வருவதாகத் தொடர்ந்து புள்ளி விபரங்கள் வெளியாகி வருவது, நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக்கிக்கொண்டு இருக்கிறது.

முக்கியமாக, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் தொடர்ச்சியாகவே அதிகரித்த வண்ணம் இருப்பது, அந்த மாநில மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதோடு, இந்தியா வரும் சக உலக நாடுகள் மத்தியிலும் இந்தியாவின் மீதான நன்மதிப்பை வெகுவாக குறைத்து வருவது வேதனை அளிக்கும் வகையில் உள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இப்படி தொடர்ச்சியாக அதிகரித்து வரும் காரணத்தால், “பெண் சுற்றுலா பயணியர் இந்தியாவுக்குத் தனியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என்று, தங்கள் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக, டெல்லியில் இருக்கும் அமெரிக்க தூதரகமானது, தங்களது நாட்டு சுற்றுலா பயணியருக்கான பயண ஆலோசனை அறிக்கையை தற்போது வெளியிட்டு இருக்கிறது.

அந்த பயண ஆலோசனை அறிக்கையில், “இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து இருப்பதாக” அதிகாரிகள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். 

“சுற்றுலாத் தலங்கள் உட்பட பல்வேறு இடங்களில் மிக கொடூரமான வன்முறைகள், பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து இருப்பதாகவும்,  இதனால் அமெரிக்க சுற்றுலா பயணியர், குறிப்பாக பெண்கள் தனியாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என்றும், அந்த அறிக்கையில், அமெரிக்காவின் இந்திய தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 

இதனிடையே, “இந்தியாவுக்குப் பயணம் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு” அமெரிக்கா, தங்கள் நாட்டுப் பயணிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.