உத்தரப் பிரதேசத்தில் 4 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து வரும் நிலையில், விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த லக்கிம்பூர் கேரி மாவட்ட வாக்குச் சாவடியில், 200 துணை ராணுவப்படை பாதுகாப்புடன் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா, ஓட்டு போட வருகை தந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லகிம்பூரில் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி அன்று விவசாயிகள் நடத்திய பேரணியின் போது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 அப்பாவி விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையத்து, அங்கு நடைபெற்ற கலவரத்தையும் சேர்த்து மொத்தமாக 9 பேர் வரை உயிரிழந்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் யாவும் தொடர்ந்து மிக கடுமையாக குரல் கொடுத்த நிலையில், மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்து உள்ளார்.

ஆனாலும், “இந்த விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பாஜக தலைமையிலான மத்திய அரசு எதுவும் செய்யவில்லை” என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வந்தது. எனினும், அவர் மத்திய அமைச்சராக தொடர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தான், உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்றைய தினம் 4 ஆம் கட்ட சட்டசபை  தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அதுவும், 4 அப்பாவி விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் தான், இன்றைய தினம் வாக்குப் பதிவு நடந்து வருகிறது.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச சட்டப் பேரவை தேர்தலை ஒட்டி இன்று வாக்களிக்க வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.

அதாவது, அந்த மாநில தேர்தலுக்கான பிராசத்தில் கலந்துகொள்ளாமல் இருக்கும் வகையிலும், உள்ளூர் வாக்காளர்களின் எதிர்ப்பை தவிர்க்கும் வகையிலும், அவரை தேர்தல் பிரச்சார அரசியல் நிகழ்வுகளில் இருந்து அக்கட்சியின் தலைமையே ஒதுக்கி வைத்து வந்தது.

ஆனால், அவரது தொகுதியில் அவர் இன்றைய தினம் ஓட்டு போட்டே ஆக வேண்டும் என்று அடம் பிடித்த காரணத்தால், மிக சாதரண விவசாயிகளை சமாளிப்பதற்காக, இந்தியாவின் மாபெரும் சக்தியாக பார்க்கப்படும் இந்தியாவின் துணை ராணுவபடையைச் சேர்ந்த கிட்டதட்ட 200 பேர் புடை சூழ பாதுகாப்பு தந்த நிலையில், அந்த 200 ராணுவ வீரர்களின் பாதுகாப்புக்கு மத்தியில் தான், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவு, இன்று தனது வாக்கினை வந்து பதிவு செய்தார்.

லக்கிம்பூர் கேரியின் பன்பீர்பூரில் தனது வாக்கினை செலுத்திய அவர், அதன் பிறகு அந்த 200 க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை பாதுகாப்புடன் அங்கிருந்து பத்திரமாக வெளியேறினார். 

இது தொடர்பான வீடியோ காட்சிகள் எல்லாம் வட இந்திய ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, “ஒரு மத்திய அமைச்சர் ஓட்டு போட 200 ராணுவ வீரர்களின் பாதுகாப்பு ஏன்?” என்கிற கேள்வியும், எதிர்ப்பு குரலும் தற்போது எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.