கண்ணாம்பூச்சி விளையாட போன 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் சேர்ந்த பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் பெரும்பாலானோர் விரும்புவது தங்களுக்கு முதல் குழந்தை பெண் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்பது தான். அப்படிப் பிறக்கும் பெண் குழ்தைகளை கொஞ்சுவது.. உச்சி முகர்ந்து பார்ப்பது என்பது, அது அப்பாக்களுக்கே உண்டான அன்பு பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்றுத் தனமான பேரன்பு தனம் அது.

அது மட்டும் இல்லாமல், “பெண் குழந்தைகள் தான், பெற்றோருக்கு வயதான பிறகும், பொறுப்பாகக் கவனித்துக்கொள்ளும் பாசமும் நன்றிக்கடன் மிக்கவர்களே பெண் குழந்தைகள்” என்ற சொல்லாடலும்” இந்த சமூகத்தில் உண்டு.

காலம் காலமாக இந்த சமூகத்தில் பெண் குழந்தைகளை வளர்க்கும் போது மட்டும் பெற்றோர்களும், அந்த குடும்பத்தில் உள்ளவர்களும், அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று, பெரியோர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கணவனும் - மனைவியும் வேலைக்குச் செல்லும் வீட்டில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் அதிக அளவிலான குறைபாடுகள் தன் காணப்படுகிறது.

வீட்டிலேயே இருக்கும் பெற்றோர்கள் கூட, எந்நேரமும் டி.வி.யிலேயே மூழ்கி இருந்தாலும், வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை அவ்வளவாகக் கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும், தற்போது பரவலாக எழத் தொடங்கியிருக்கிறது. 

இப்படி பெண் குழந்தை வளர்ப்பில் எல்லாவிதமான எச்சரிக்கையையும் மீறி, அலட்சியம் காட்டும் பெற்றோர்களால் இந்த சமூகத்தில் பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் என்பது ஏராளம். அப்படியான ஒரு பெருங் குற்றம் தான் தற்போது இந்தியாவில் அரங்கேறி இருக்கிறது.

இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தான், 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் சேர்ந்த பாலியல் வன்கொடுமை செய்த மனசை ரணமாக்கும் கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. 

திரிபுரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுமி ஒருவர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், சிறுமியும் வீட்டிலேயே இருந்து வந்தார். 

மேலும், வீட்டில் இருந்த சிறுமி, அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் ஒன்று சேர்ந்து விளையாடும் போது, அவர்களுடன் சேர்ந்து தொடக்கத்தில் விளையாடி உள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் அந்த சிறுமியின் வீட்டின் அருகே உள்ள சிறுவர்கள் சிலர், “கண்ணாம்பூச்சி விளையாட வா?” என்று, சிறுமியை அழைத்து உள்ளனர். அந்த சிறுமியும், “நமக்குத் தெரிந்த அண்ணன்கள் தானே அழைக்கிறார்கள்” என்று, அவர்களுடன் விளையாடச் சென்று உள்ளார். 

அப்போது, சிறுமி மறைவான பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த பகுதியைச் சேர்ந்த 6 பேர் சேர்ந்து, அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

அதன் பிறகு வீடு திரும்பிய சிறுமி, வீட்டில் உள்ளவர்களிடம் எதுவுமே கூறவில்லை. ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே கடும் வயிற்று வலியால் சிறுமி துடித்து உள்ளார். இதனால், பதறிப் போன சிறுமியின் பெற்றோர்கள், “என்ன நடந்தது?” என்று விசாரித்துள்ளனர். அப்போது, “தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து” சிறுமி அழுதுகொண்டே கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேரையும் கைது செய்தனர். இதில், 4 பேர் சிறுவர்கள் என்பது தான் வேதனையின் உச்சம்.

மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக மொத்தம் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 6 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள ஒருவரை மட்டும் தேடி வருகின்றனர். 

குறிப்பாக, கைது செய்யப்பட்ட 4 சிறுவர்களும், அங்குள்ள சிறார் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

மேலும், கைது செய்யப்பட்ட 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த மாநில மனித உரிமைகள் அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் “இந்த சிறுமி பாலியல் வன்கொடுமை விசயத்தை, நாம் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது. 

சிறுவர்கள் மனதில் ஏன் இப்படியான இது போன்ற வக்கிரமான எண்ணங்கள் தோன்றுகிறது? சிறுவர்கள் ஏன் இந்த வயதிலேயே தவறான பாதைக்குச் செல்கிறார்கள்? சமூகத்தில் இப்படியான சூழல்கள் உருவாக என்ன காரணம்? என்பது பற்றி அனைவருமே யோசிக்க வேண்டும்” என்றும், வலியுறுத்தி உள்ளனர்.

அத்துடன், “குழந்தைகளுக்கு அறம் குறித்த சிந்தனைகள் மற்றும் நீதி கதைகள் சிறு வயது முதலே அவர்களது மனதில் விதைக்கப்பட வேண்டும்” என்றும், வலியுறுத்தி உள்ளனர். 

இதனால், பெண் குழந்தைகளை வைத்திருப்போர், இன்னும் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என்பது, இது போன்ற நிகழ்வுகள் நமக்கு கற்றுத் தரும் பாடங்களாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.