மருத்துவமனையிலிருந்து கொரோனா சிகிச்சைக்குப் பிறகு மகளுடன் நடந்தே வீடு திரும்பிக் கொண்டிருந்த தாயை கடத்திய கும்பல், கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அசாம் மாநிலம் சரைதியோ மாவட்டம் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் முற்றிலும் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பசுமையான பகுதியாகத் திகழ்கிறது. 

அதே நேரத்தில், இந்த பகுதிகள் பெரும்பாலும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் திகழ்கிறது. 

அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணின் குடும்பத்தினர் அடுத்தடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர். 

அப்போது, அந்த குடும்பத்தின் தாய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தாயும் மகளும் அங்கிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு, அவர்கள் இருவரும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி தாயும், மகளும் குணமடைந்தனர். இதனையடுத்து, அவர்களை வீட்டிற்குச் செல்ல மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

அதே நேரத்தில், அசாம் மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக, தற்போது அங்கு முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தங்கள் வீட்டுக்குச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் அளிக்குமாறு அந்த இரு பெண்களும் மருத்துவமனையில் கேட்டு உள்ளார். அதற்கு, “ஆம்புலன்ஸ் தர முடியாது” என, மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனால், வேறு வழியின்றி, 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊருக்கு தாயும் - மகளும் நடந்தே செல்வது என்று முடிவு செய்தனர். அதன் படி, தாயும் - மகளும் மதியம் 2.30 மணி அளவில், மருத்துவமனையிலிருந்து தங்களின் வீட்டுக்கு நடந்தே செல்ல தொடங்கினர்.

இப்படியாக, அவர்கள் இருவரும் அந்த வழியாக மாலை நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த சிலர், தாயையும் - மகளையும் இடைமறித்த அவர்கள் இருவரிடமும் அந்த கும்பல் தகாத முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த தாயும் - மகளும் அங்கிருந்து ஓட்டம் பிடித்து உள்ளனர். இதில், மகள் எப்படியோ தப்பிச் சென்ற நிலையில், அரவது தாயை துரத்திப் பிடித்த அந்த கும்பல், அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்குக் கடத்திச் சென்று அவரை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதே நேரத்தில், அங்கிருந்து தப்பி ஓடி அவரின் மகள், அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களிடம் நடந்தவற்றைக் கூறி உதவிக்கு ஆட்களை அழைத்து வந்து தனது தாயாரைத் தேடி உள்ளார். அப்போது, சுமார் 2 மணி நேரம் தேடியதற்குப் பிறகு, கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட தனது தாயை அவர்  
கண்டுபிடித்திருக்கிறார்.

இதனையடுத்து, அடுத்த 2 நாட்கள் கழித்து, இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்து உள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, “மருத்துவமனையின் அலட்சியம் தான் இந்த பாலியல் பலாத்கார சம்பவம் நடைபெறக் காரணம் என்றும், ஆம்புலன்ஸ் மட்டும் கொடுத்திருந்தால் அவர்கள் இருவரும் 25 கிலோ மீட்டர் நடந்து வந்திருக்கத் தேவை இருந்திருக்காது என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்றும், பழங்குடியினர் மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.