ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க இன்றே கடைசி நாளாகும். இந்த வாய்ப்பினை தவறவிட்டால்  இனி பயனர்களிடமிருந்து ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்படும் என அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் அனைவரும் ஆதார் எண்ணுடன், பான் அட்டையை  இணைப்பது கட்டாயமாக்கி, அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆதார் - பான் இணைப்பு குறித்து மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை இதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பலரால்  ஆதாருடன், பான் எண்ணை இணைக்க முடியாமல் போனது. இதனையடுத்து  ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டது. அதாவது இன்று வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் நான்காவது முறையாக  நீட்டிக்கப்பட்ட இந்த ஆதார் - பான் இணைப்புக்கான இந்தக் காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.  இந்நிலையில்  இந்த இரண்டு ஆவணங்களையும்  இணைக்காவிட்டால்,  பயனர்களின் பான் கார்டு செல்லுபடியாகாமல் போய்விடும் என்றும், அதுமட்டுமின்றி ரூ.1,000 அபராதம்  வசூலிக்கப்படும் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.  

அதனைத்தொடர்ந்து இதுவரை ஆதார் எண்ணுடன்  பான் கார்டை இணைக்காதவர்கள் incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் சென்று, ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண்களை பதிவு செய்து இணைத்துக்கொள்ளலாம். பின்னர்  ஆதாரில் உள்ளது போலவே பயனர்கள் தங்களது பெயரை பதிவு செய்து அதன் பிறகு கேப்சா எனப்படும் குறியீடு அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் ரகசிய எண்ணை (OTP) கொடுத்து இணைக்கலாம்.
 
மேலும் இதனில் ஆதார் எண், பான் எண் இரண்டும் இணைக்கப்பட்டுவிட்டால் ஆதாரின் கடைசி 4 இலக்க எண்ணுடன் உறுதிபடுத்தப்பட்ட குறுந்தகவல் வரும். மேலும் குறுஞ்செய்தி மூலமாகவும் ஆதார் எண், பான் இணைப்பை பதிவு செய்யலாம்.  மொபைலில் UIDPAN டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்த பிறகு ஒரு இடைவெளி விட்டு பான் கார்டு எண்ணையும் டைப் செய்து, 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு மெசேஜ்  அனுப்பினால் இரண்டும் இணைக்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.