“தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு அடுத்த 5 மாதங்களுக்கு கோதுமை ஒதுக்கீடு செய்யப்படாது” என்று, மத்திய அரசு அறிவித்துள்ளதால், தமிழகத்தில் உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அங்கு ஆட்சி கவிழ்க்கப்பட்டு, புதிய ஆட்சிக்கு அமைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான இலங்கையில் மிக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அந்நாட்டு மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், கடுமையான பொருளாதார நெருக்கடியால் இலங்கை தற்போது தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. 

இலங்கையில் தற்போது, அன்னியச் செலாவணி கையிருப்பு கரைந்து போனதால், இறக்குமதி மிக கடுமையான அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.  இதன் காரணமாகவே, இலங்கையில் அத்தியாவசியப் அடிப்படை பொருட்களுக்கு மிக கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலையும் கிடுகிடுவென ஒரே அடியாக உயர்ந்து இருக்கிறது.

இவற்றுடன், அந்நாட்டில் எரிப்பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடுகள் ஏற்பட்டு உள்ளது. அந்நாட்டில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக் கிடந்து, பல மடங்கு அளவுக்கு அதிக விலை கொடுத்து எரிப்பொருட்களை வாங்கிச் செல்லும் அவல நிலையும் உள்ளன.

இந்த கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையில் தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு நிலவி வருவதாகவும், இதன் காரணமாக அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அந்நாட்டு அரசிற்கு எதிராக, இலங்கை மக்கள் மிகப் பெரிய போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். 

எனினும், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் இலங்கைக்கு தொடர்ந்து உணவு பொருட்கள் உட்பட பல உதவிகளை செய்து வருகிறது.

அத்துடன், “இலங்கை மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்குமாறு” தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த சூழலில் தான், “பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு அடுத்த 5 மாதங்களுக்கு கோதுமை ஒதுக்கீடு செய்யப்படாது” என்று, மத்திய அரசு அறிவித்து உள்ளது. 

அதாவது, “பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 11 மாநிலங்களுக்கு வருகின்ற செப்டம்பர் மாதம் வரையிலான கோதுமை ஒதுக்கீட்டை உணவு அமைச்சகம் நேற்று திருத்தி உள்ளது. 

அதாவது, திருத்தப்பட்ட ஒதுக்கீட்டின் கீழ் அடுத்த 5 மாதங்களுக்கு தமிழ்நாடு, கேரளா, பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து கோதுமை கிடைக்காது. 

எனினும், “இந்த மாநிலங்களில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க, குறிப்பிட்ட இந்த 4 மாநிலங்களுக்கும், மத்திய தொகுப்பில் இருந்து அரிசி மட்டும் விநியோகிக்கப்படும்” என்றும், மத்திய அரசு கூறியுள்ளது.

முக்கியமாக, டெல்லி, குஜராத், மராட்டியம், மேற்கு வங்கம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு கணிசமான அளவு கோதுமை ஒதுக்கீடு குறைக்கப்பட்டு அரிசி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, மத்திய அரசு மாநிலங்களுக்கு அளித்து இருக்கும் தகவலில் படி, “உணவு பற்றாக்குறையை போன்ற சூழ்நிலையை தடுக்கவும் இருப்பு விதிமுறைகளின் படி போதுமான தானிய இருப்பை உறுதி செய்யவும், மாநிலங்களுக்கான அரிசி, கோதுமைக்கான ஒதுக்கீட்டை மறு பரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்” தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

குறிப்பாக, கொரோனா தீவிரமாக பரவிய போது, தொடங்கப்பட்ட கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம், சமீபத்தில் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. 

இந்த திட்டத்தின் கீழ், 80 கோடி பயனாளிகளுக்கு மாதம் தோறும் 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தில் தான், தற்போது “தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு செப்டம்பர் மாதம் வரை கோதுமை கிடையாது” என்று, மத்திய அரசு தற்போது கைவிரித்து உள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு அடுத்த 5 மாதங்களுக்கு கோதுமை ஒதுக்கீடு செய்யப்படாது என்ற காரணத்தால், குறிப்பிட்ட இந்த 4 மாநிலத்திலும் உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும், கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான எதிர்மறையான கருத்துக்களும், இணையத்தில் வைரலாகி வருகிறது.