நாட்டில் நீர் மேலாண்மையை சிறப்பாக மேற்கொண்ட மாநிலங்கள், மாவட்டங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சமூக செயற்பட்டளர்களுக்கு தேசிய அளவிலான விருது பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

2019-ஆம் ஆண்டுக்கான நீர் மேலாண்மையில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட மாநிலங்களுக்கு மத்திய ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. அதன்படி கடந்த ஆண்டுக்கான நீர் மேலாண்மைக்கான விருது பட்டியல் அறிவித்துள்ளது. அதில் தமிழகம் முதலிடத்தையும், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் முறையே 2 மற்றும் 3-வது இடத்தை பிடித்துள்ளது. 

அதேபோல் சுற்றுச்சூழல் பாதிப்படைந்த ஆறுகளை சிறப்பாக மறு சீரமைப்பு செய்தமைக்காக வேலூர் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுக்கு மதுரை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது

நாட்டில் வறண்ட நிலப்பரப்புகளை அதிகம் கொண்ட மாநிலங்களாகக் கருதப்படும் மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் நீர் மேலாண்மையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்ததன் பலனாக, நீர் மேலாண்மைக்கான தேசிய விருதுப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. நீர் மேலாண்மை சிறப்புப் பிரிவில் மிசோரம் முதலிடம் பிடித்துள்ளது.

மேலும் தென்னிந்தியாவில் நீர் நிலைகளை பாதுகாப்பதில் சிறந்த மாவட்டமாக பெரம்பலூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதிய நீர்நிலைகளை உருவாக்குதல், பழைய நீர்நிலைகளை புதுப்பித்து மேம்படுத்துதல் உள்ளிட்டப் பணிகளை சிறப்பாகக் கையாண்டதற்காக பெரம்பலூர் முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த மாவட்டங்கள் முதல் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன.

மேலும், நீர் மேலாண்மையை கற்பித்து, மாணவ, மாணவிகளை ஊக்குவித்த பள்ளிகளுக்கான விருதப் பட்டியலில் புதுச்சேரியின் காட்டேரிக்குப்பத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது.

நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்ட தென்னிந்திய சமூக செயற்பாட்டாளர்களாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் முதல் பரிசையும், அண்ணா பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் சக்திநாதன் கணபதி பாண்டியன் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளனர்

ஆர்.மணிகண்டன், கோவை, சுந்தராபுரத்தை சேர்ந்த ஆர்.மணிகண்டன்(38) 9 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மணிகண்டன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இளைஞர்களுடன் இணைந்து கோவை குளங்கள் பாதுகாப்பு குழுவினை ஏற்படுத்தினார்.

இக்குழு மூலம் கோவையில் பாழடைந்த நீர் நிலைகளை மீட்டெடுக்கும் பணியில் இந்த இளைஞர்கள் ஈடுபட்டு  வருகின்றனர். நொய்யல் ஆறு, அதனையொட்டிய குளங்கள், வரத்து கால்வாய்களை மீட்டெடுத்து வருகின்றனர். 

பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த  வெள்ளலூர் குளத்தை மீட்டெடுத்தது இக்குழுவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். 200 ஏக்கருக்கு மேல் பரப்பளவுள்ள வெள்ளலூர் குளத்துக்கு நொய்யலிலிருந்து தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பிலும், பல இடங்களில் தூர்ந்து போயும் காணப்பட்டன. அதேபோல் குளத்தின் நீர் தேக்க பரப்பும் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில் காணப்பட்டது. நீர் வரத்து வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, தூர்வாரியதன் மூலம் பல ஆண்டுகளுக்குப் பின் வெள்ளலூர் குளத்துக்கு நொய்யல் நீர் வந்தது. அதன்பின் கடந்த 4 ஆண்டுகளாக குளம் நிறைந்து காணப்படுகிறது. அதனுடன் வெள்ளலூர் குளக்கரையில் அடர்நடவு முறையில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நடவு செய்தனர். தற்போது இப்பகுதி குறுங்காடு போல் காட்சியளிக்கிறது. தவிர பல்வேறு வகையான பறவைகள், பூச்சிகள், ஊர்வனங்கள் வருவதில் பல்லுயிர் பெருக்க மண்டலமாக இப்பகுதி மாறியுள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் கோவை குளங்கள் பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள்.

வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று இக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் நீர் நிலைகளை தூய்மைப்படுத்துதல், பராமரிப்பு போன்ற களப்பணிகளை செய்து வருகின்றனர். தற்போது 160 வரங்களை கடந்து களப்பணிகள் செய்து வருகின்றனர். தொடர்ந்து நொய்யலை ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள அனைத்து குளங்களையும்  மீட்டெடுக்கும் முயற்சியுடன் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் களப்பணி தொடர்கிறது.

இவர்களின் பணியை சிறப்பிக்கும் வகையில் நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்ட தென்னிந்திய சமூக செயற்பாட்டாளர்களுக்கான விருதில் முதல் பரிசு கோவை குளங்கள் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆர்.மணிகண்டனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.