ஒமிக்ரானால் இந்தியாவில் பிப்ரவரியில் மூன்றாவது அலை ஏற்படலாம் என ஐஐடி விஞ்ஞானி மனீந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் போக்கை கணித ரீதியில் கணித்துச் சொல்லும் நிபுனர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள ஐஐடி பேராசிரியர் மனீந்திர அகர்வால் இந்த எச்சிரிக்கையை கொடுத்துள்ளார். 

மனீந்திர அகர்வால் அளித்துள்ள பேட்டியில்: 

“ஒமிக்ரானால் இந்தியாவில் பிப்ரவரியில் மூன்றாவது அலை ஏற்படலாம். ஆனால் அதன் தாக்கம் இரண்டாவது அலையைவிட குறைவாகவே இருக்கும். அன்றாடம் ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம். இதுவரை உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அடிப்படையில் பார்க்கும்போது ஒமிக்ரான், டெல்டா திரிபை போல் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 

OMICRON THIRD WAVE INDIA

ஆனால் தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் பரவும் வேகம் கணக்கில் கொள்ளப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இதுவரை மருத்துவமனையில் சேர்வோர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மருத்துவமனைகளில் எவ்வளவு பேர் அனுமதிக்கப்படும் சூழல் உருவாகிறது என்ற புள்ளி விவரம் கிடைக்கும் போதே நிலைமை தெளிவாகப் புலப்படும். 

இப்போதைக்கு ஒமிக்ரான் பரவும் தன்மை அதிகம். ஆனால் அதன் தாக்கம் டெல்டாவை ஒப்பிடும்போது அதிகமில்லை. டெல்டா பரவலின்போது கடைபிடிக்கப்பட்டது போல், இரவு நேர ஊரடங்கு போல் மிதமான ஊரடங்கு, கூட்டங்களுக்குத் தடை விதிப்பது ஆகியனவற்றைக் கடைப்பிடித்தால் பரவல் உச்சம் தொடுவதைத் தவிர்க்கலாம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 26 ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு, தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரானை கவலைக்குரிய திரிபு எனப் பட்டியலிட்டது. இதன் பரவும் தன்மை அதிகரித்து வருகிறது. ஆனால் இது தீவிர பாதிப்பு, உயிர் சேதத்தை ஏற்படுத்துகிறதா என்பது இதுவரை உறுதியாகவில்லை. அதேபோல் தடுப்பூசி ஆற்றலை எதிர்க்குமா என்பதும் உறுதியாகவில்லை. 

அடுத்த இரண்டு வாரங்களில் கூடுதல் தகவல்களை எதிர்பார்ப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 23 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 10 பேருக்கு இத்தொற்று உறுதியாகியுள்ளது.

OMICRON THIRD WAVE INDIA

முன்னதாக அறிவியல் தொழில்நுட்ப துறையானது சூத்திரா மாடலின் படி வெளியிட்ட கணிப்பில் இந்தியாவில் அக்டோபரில் மூன்றாவது அலை ஏற்படும் எனக் கூறப்பட்டது. டெல்டா வகை கொரோனா பரவிய சமயத்தில் 3-வது அலை குறித்த செய்திகள் வெளிவந்த நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியதால், டெல்டாவால் 3-வது அலை உருவாகுவது கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒமிக்ரானால் 3-வது அலை பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது கவனிக்கத்தக்கதாகும்.

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு உலகம் முழுவதும் 46 நாடுகளில் தாக்கியுள்ளது.  அமெரிக்காவின் 15 மாகாணங்கள் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளன.  அமெரிக்கா உள்பட பல நாடுகளில் மூன்றாவது அலை தாண்டவம் ஆடி வருகிறது என்பதும், இதனால் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு கொரோனா முதல் அலையும், 2021 ஆம் ஆண்டில் கொரோனா இரண்டாவது அலையும் இந்தியா முழுவதும் பரவி மிகப்பெரிய உயிர் சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.