கடந்த மாத இறுதியில், பாலியல் வன்முறை தொடர்பான சட்டப் பிரிவுகளை, மூன்றாம் பாலினத்தவர் களுக்கும் விரிவுபடுத்தக் கோரி, டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் டெல்லியைச் சேர்ந்த, ரீபக் கன்சால் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில், பொது நலன் வழக்கு தொடர்ந்துள்ளார்.மனுவில் அவர் கூறியுள்ளதாவது:'திருநங்கையர் உள்ளிட்டோரை, மூன்றாம் பாலினமாக கருத வேண்டும்' என, உச்ச நீதிமன்றம், 2014ல் தீர்ப்பு அளித்து உள்ளது. ஆனாலும், பாலியல் வன்முறை தொடர்பான சட்டங்கள் மற்றும் அதன் திருத்தங்களில், மூன்றாம் பாலினத்தவரை சேர்க்கவில்லை.

இதனால், மூன்றாம் பாலினத்தோருக்கு உரிய சட்ட பாதுகாப்பு கிடைப்பதில்லை.இந்த உரிமைகளை, பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், சம உரிமை கிடைக்கும் வகையிலும், இந்தச் சட்டங்களில், மூன்றாம் பாலினத்தவரையும் சேர்க்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மூன்றாம் பாலினத்தவருக்கான வசதிகள் குறித்தும், அவர்களுக்கான தேவைகள் குறித்தும் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. இதனொரு பகுதியாக, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், திருநங்கையான கிரேஸ்பானுகணேசன் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசுக்கு எதிராக நல்ஷா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் இதுவரை தனி இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு இரண்டு சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் உடற்கூறு ஆய்வு இல்லாமல் திருநங்கை, திருநம்பிகளுக்கு அடையாள அட்டை வழங்க தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில்மனுவில், மூன்றாம் பாலினத்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து, இடஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட மூன்றாம் பாலினத்தவர் பட்டியலின வகுப்பைச்  சேர்ந்தவராக இருந்தால், அவருக்கு பல சலுகைகள் மறுக்கப்படுகிறது. திருநங்கைகள் நலவாரியத்தில் அரசுத்துறையினர் மட்டுமே இடம் பெற்றுள்ளதாகவும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக வரும் அக்டோபர் 29-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.