“டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் குண்டர்கள்” என்று, மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி காட்டமாக விமர்சனம் செய்துள்ளது கடும்
அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய இந்த விவசாயிகள் போராட்டம் கடந்த 5 மாதங்களையும் தாண்டி, 200 நாட்களைக் கடந்து, 250 நாட்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

டெல்லி எல்லையான சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் பகுதிகள் மற்றும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள்
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு 10 க்கும் மேற்பட்ட முறை பேச்சு வார்த்தை நடத்தியும், இது வரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
ஆனால், “3 புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும்” என்பதில், விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து
வருகிறது.

இந்த நிலையில் தான், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, மத்திய அரசின்
கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே தினந்தோறும் போராட்டம் நடத்த விவசாயிகள் தற்போது முடிவு செய்துள்ளனர். 

ஆனால் விவசாயிகளின் இந்த திட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். 

அத்துடன், கொரோனாவை காரணம் காட்டி விவசாயிகளுக்கு இந்த போராட்டத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. 

இதைத்தொடர்ந்து, தங்கள் போராட்டக்களத்தை டெல்லி ஜந்தர் மந்தருக்கு மாற்ற விவசாயிகள் முடிவு செய்திருக்கிறார்கள். 

அதாவது வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று முதல் நாள்தோறும் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என சம்யுக்தா கிசான் மோர்ச்சா
அமைப்பு அறிவித்துள்ளது. இந்த போராட்டத்துக்காக டெல்லி சிங்கு எல்லையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகளில் பல விவசாயிகள் ஜந்தர் மந்தருக்கு
சென்றுள்ளனர். 

அங்கே, “விவசாயி நாடாளுமன்றம்” என்னும், நிகழ்ச்சியை விவசாயிகள் ஒன்றிணைந்து நடத்துகிறார்கள். 

இதற்காக நாள்தோறும், 200 போராட்டக்காரர்கள் சிங்கு எல்லையில் இருந்து ஜந்தர் மந்தர் செல்ல உள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். விவசாயிகளின் இந்த
போராட்டத்தையொட்டி, ஜந்தர் மந்தரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. 

இதனால், சிங்கு எல்லையில் இருந்து விவசாயிகளை ஜந்தர் மந்தர் ஏற்றிச் செல்லும் பேருந்துகளை டெல்லி போலீசார் இன்றைய தினம் தடுத்து நிறுத்தினார்கள்.
இதனால், 200 விவசாயிகள் அடங்கிய குழு போராட்டம் நடத்த ஜந்தர் மந்தர் வந்தடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக பேசிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி, “போராட்டம் நடத்தும் அவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள்
குண்டர்கள், அவர்கள் செய்பவை குற்றச் செயல்கள்” என்று, மிக கடுமையாக விமர்சனம் செய்தார். 

“கடந்த ஜனவரி 26 ஆம் தேதி அன்று, நடந்தது வெட்கக்கேடான குற்றவாளிகளின் நடவடிக்கைகள் என்றும், எதிர்க்கட்சிகள் இது போன்ற விவசாயிகளின்
நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

“ 'உழவர் நாடாளுமன்றத்தில்' ஒரு ஊடகத்தைச் சேர்ந்த நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இதனிடையே, “டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் குண்டர்கள்” என்று, மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி காட்டமாக விமர்சனம்
செய்துள்ளது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பாவி விவசாயிகளை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளதாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.