தமிழகத்தில் 90% அரசுப் பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. ஒன்றிய அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கத்தினர் 2 நாட்கள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்துக்கு பல்வேறு தனித்தனி தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளின் தொழிலாளர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் 30-ம் தேதி காலை 6 மணி வரை நடைபெறும் இந்த 2 நாள் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 20 கோடிக்கும் அதிகமான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொடங்கிய வேலைநிறுத்தத்தில் வங்கிகள், எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. இதன்காரணமாக, நேற்று பொதுப்போக்குவரத்து கடுமையாக பாதிப்புக்குள்ளானது. பேருந்துகள் மிகக்குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டதால் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி 60 சதவீத பஸ்கள் இன்று ஓடும் என்று போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று அறிவித்தது. அதன் அடிப்படையில் இன்று தமிழகத்தில் 90% அரசுப் பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி நேற்று போதிய அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் மக்கள் அவதிக்கு ஆளான நிலையில், இன்று கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்று காலை 5 மணியில் இருந்து சென்னையில் மாநகர பஸ்கள் மற்றும் வெளிமாவட்ட பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 8 மண்டலங்களில் பொதுமக்களுக்கு சிரமம் இன்றி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 98.2 சதவீத மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் மண்டலத்தில் 86 சதவீத பஸ்களும், சேலம் மண்டலத்தில் 96 சதவீத பஸ்களும், திருநெல்வேலி மண்டலத்தில் 96 சதவீத பஸ்களும், கோவை மண்டலத்தில் 90 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் 17,268 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் இருந்து மட்டும் 3,233 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவதும், சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் மட்டும் 61 சதவீதம் இயக்கப்படுகின்றன. மாலை நேரங்களிலும் இதைபோல பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.