துபாயில் தனியார் ஓட்டலில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டத்தில், ‘தமிழ்நாட்டின் தொழில்துறை கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக துபாய் வந்துள்ள நிலையில் நேற்று துபாய் பிசினஸ் பே பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமீரகத்தின் பல்வேறு நிறுவனங்கள், தமிழ்நாட்டில் ரூ.1,600 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
 
இந்நிலையில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: வணக்கம் துபாய், ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற தன்னம்பிக்கை மொழியை ஏற்று துபாய்க்கு குடிபெயர்ந்து இந்த மண்ணையும் வளமாக்கியுள்ள தமிழ்ச் சொந்தங்களே! ஐக்கிய அரபு நாடுகளுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவு முன் எப்போதையும் விட இப்போது வலுவாக வளர்ந்து வருகிறது.

மேலும் உலகமே வியந்து பார்க்கும் நகரமாக தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதில் நாம் அனைவருக்கும் மிகுந்த ஆர்வம் உள்ளது. இந்த அரங்கில் பெருமளவில் நீங்கள் கூடி இருப்பதற்கு இதுவே சாட்சியாக அமைந்துள்ளது. ஒரு அழகான நகரத்தில் நீங்கள் வசிக்கிறீர்கள். அதனை உங்கள் முகங்களின் மூலமாக நான் அறிகிறேன். துபாய் மிக அழகான நகரம் மட்டுமல்ல, வர்த்தகம் அதிகம் நடைபெறும் நகரமும் கூட. 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்த துபாய், இன்று உலகமே வியந்து பார்க்கும் நகரமாக வளர்ந்துள்ளது. துபாய் மக்கள், ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் சட்டத்தை மதிக்கும் நற்பெயரைப் பெற்றவர்கள். அதனால் தான் உங்களை நான் நாடி வந்திருக்கிறேன்.

அதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர் முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன, வருகிற 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிடும் வகையில் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுகிறோம். அந்த லட்சிய இலக்கினை அடைவதற்காக, தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பணியாளர்களின் திறனை மேம்படுத்துதல், வருங்கால தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அதற்காக, பணியாளர்களை தயார்படுத்துதல் போன்ற பல முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இந்த சூழ்நிலையில், நீங்கள் எங்கள் மாநிலத்தில் முதலீடுகளை செய்வதற்கான வாய்ப்புகளும் சாத்தியக்கூறுகளும் ஏராளமாக உள்ளது என்று தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ரியல் எஸ்டேட் வணிகத்திற்கு, மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன. அது மட்டுமா? சுற்றுலாத் துறையிலும் விருந்தோம்பல் துறையிலும் எங்கள் மாநிலத்தில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது.

வேளாண்மைத் துறையைப் பொறுத்தவரையில் குளிர்பதனக் கிடங்குகள், சேமிப்புக்கிடங்குகள் ஆகியவற்றின் தேவை எங்களுக்கு உள்ளது. நிதி நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தரவு மையங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளிலும் சிறந்த உட்கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளோம். மின்னணுவியல் துறையைப் பொறுத்த வரையில், மின் வாகனங்கள், மின்னேற்றி நிலையங்கள் போன்றவற்றில் முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாட்டின் 2-வது பெரிய துறைமுகம் மற்றும் அகில இந்திய அளவில் 3-வது பெரிய கொள்ளளவு கொண்ட துறைமுகம் தூத்துக்குடி. அங்கு சர்வதேச அறைகலன் பூங்காவுக்கு சில வாரங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டினேன். அடிக்கல் நாட்டிய அன்றே, அந்த அறைகலன் பூங்காவில் 375 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கிறது. நம்பிக்கையுடன் முதலீடுகளை மேற்கொள்ள தகுந்த இடம் எங்களது தூத்துக்குடி சர்வதேச அறைகலன் பூங்கா.

மேலும் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்து, அதன் மூலம் சமூகநலம் பேணுதல் என்ற நோக்குடன் செயல்பட்டு வரக்கூடிய நாங்கள், எங்கள் முதலீட்டு கோரிக்கைகளை உங்கள் முன் வைத்துள்ளோம். எண்ணற்ற உலகளாவிய, புகழ்பெற்ற நிறுவனங்கள், தங்களது உற்பத்தி திட்டங்களை தமிழ்நாட்டில் அமைத்திருக்கிறது. மேலும் 75-க்கும் மேற்பட்ட ‘பார்ச்சூன்’ 500 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அமைந்திருக்கின்றன. பல்வேறு நாடுகளின் முதலீட்டாளர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு முதலீடுகளை ஈர்த்திடுவதற்கு ஏதுவாக, வழிகாட்டி நிறுவனத்தில் நாடுவாரியாக பிரத்யேக அமைவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டின் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை இதன் மூலம் வெளிப்படுகிறது. தொழில் புரிவதற்கும், முதலீடுகள் மேற்கொள்வதற்குமான அழைப்புகளுக்கு எங்கள் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். வாய்ப்புகள் ஏராளமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு என்பதை நீங்கள் அறிவீர்கள். எங்கள் வளர்ச்சிக்கு வித்திடுவது, உங்கள் வளர்ச்சிக்கும் துணை புரிந்திடும் என்று நான் உறுதியளிக்கிறேன். எங்கள் வளர்ச்சியில் பங்கேற்று, நீங்களும் பயன் அடைந்திட வாருங்கள், இணைந்து பயணிப்போம், இணைந்து வளர்ச்சி பெறுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.