பாலியல் வெறியால், அரசு பள்ளியில் வைத்தே தலைமை ஆசிரியர் ஒருவர் 5 சிறுமிகளை வரிசையாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  
தெலுங்கானா மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் படித்து வரும் பள்ளி சிறுமிகளுக்குத் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

கோத்தகுடெம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில், சுமார் 40 வயது மதிக்கத் தக்க ஒருவர் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு அந்த மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்பட்டது. 

அப்போது, பள்ளிக்கு பல மாணவிகள் வருகை தந்த நிலையில், சில மாணவிகள் வருகை தரவில்லை என்று, கூறப்படுகிறது.

மிகச் சரியாக, கடந்த ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு வந்த 7 வயர் முதல் 11 வயதுக்கு உட்பட்ட 5 சிறுமிகளை, தனியாக அழைத்துச் சென்ற அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்த 5 சிறுமிகளையும் அந்த அரசுப் பள்ளிக்குள் வைத்தே அடுத்தடுத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

முக்கியமாக, அந்த சிறுமிகளை மிரட்டியே அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பலமுறை தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் என்று, கூறப்படுகிறது. 

அந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முன்னதாக அந்த தலைமை ஆசிரியர், அந்த 5 சிறுமிகளையும் தனது செல்போனில் ஆபாசப் படத்தை காட்டி, அதை பார்க்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இதனையடுத்து, இது குறித்து  வெளியே சொன்னால் அவர்களை கொலை செய்து விடுவதாகவும், அந்த 5 சிறுமிகளையும் அவர் மிரட்டி இருக்கிறார்.

அந்த சிறுமிகள் பாலியல் பலாத்கார வேதனையை அனுபவித்த அடுத்த சில நாட்களில், அந்த 5 சிறுமிகளில் 2 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

இதனால், பயந்துபோன சிறுமியின் பெற்றோர், அந்த மாணவிகளை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, என்ன நடந்தது என்று மருத்துவர்கள் கேட்டபோது, “பள்ளியின் தலைமை ஆசிரியர் எங்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக” அந்த இரு சிறுமிகளும் அழுதுகொண்டே கூறி உள்ளனர். 

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது இந்தியத் தண்டனைச்சட்டம்  மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த விசயம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு தெரிய வந்த நிலையில், அவர் உடனடியாக தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, தலைமறைவான பள்ளியின் தலைமை ஆசிரியரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார், அந்த தலைமை ஆசிரியரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், அந்த மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை மைய அதிகாரிகள், போலீசாராருடன் சேர்ந்து பாதிக்கபட்ட 5 சிறுமிகளையும் மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே, பாலியல் வெறியால், அரசுப் பள்ளியில் வைத்தே, தலைமை ஆசிரியர் ஒருவர் தன்னிடம் படிக்கும் 5 சிறுமிகளை வரிசையாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், அந்த மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும், அந்த தலைமை ஆசிரியருக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.