மனைவி ஏமாற்றியதால், சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு கள்ளக் காதலில் ஈடுபடும் பெண்களைக் கடத்திச் சென்று, இதுவரை 23 கொலைகள் செய்த கொடூர கொலைகாரனை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் தான், இப்படியான ஒரு கொடூர கொலைகள் அரங்கேறி இருக்கின்றன.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த காவாலா ஆனந்தையா என்ற நபர், தன்னுடைய மனைவி வெங்கடம்மாவை காணவில்லை என்று, அங்குள்ள ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 1 ஆம் தேதி புகார் அளித்தார். 

இது குறித்து வழகுப் பதிவு செய்த போலீசார், கடந்த மாதம் 4 ஆம் தேதி அன்று, அவரது மனைவியின் உடல் அன்குஷ்புர் கிராமத்தில் உள்ள ஒரு ரயில்வே தண்டவாளத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் படி, அங்குள்ள கத்கேசார் காவல் துறையினர் அந்த உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து வழகுப் பதிவு செய்த போலீசார், அப்பகுதி இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது, குற்றவாளி ராமுலு என்பவர், தனது உடல் சுகத்திற்காக, வெங்கடம்மாவை ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு பேசியே அழைத்துச் சென்றது தெரிய வந்தது. 

அத்துடன், மது போதையில் இருந்த ராமுலு, வெங்கடம்மாவை அப்போது அடித்து கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றிருக்கிறார். 

அதே போல், அங்குள்ள சைபராபாத் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாலா நகர் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் தேதியும் இன்னொரு பெண்ணையும் இதுபோன்று கடத்திச்சென்று கொலை செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது. அந்தப் பெண்ணை, அந்த பெண்ணின் புடவையை வைத்தே கழுத்தை நெறித்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்தக் கொலைகள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த விசாரணையில், அங்குள்ள சங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான மைனா ராமுலு என்பவர் தான், இதுபோன்ற கொலைகளைச் செய்தவர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இவர், இதற்கு முன்பே கடந்த 2003 - 2019 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 16 கொலை வழக்குகளில் ராமுலு கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், கடந்த 2011 ஆம் ஆண்டு சிகிச்சைக்காக சிறையிலிருந்து எர்ரகட்டா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, சக குற்றவாளிகளுடன் சேர்ந்து அவர் தப்பிச் சென்றார். அதன் பின்னர் வெளியே சென்ற ராமுலு மேலும் 5 கொலைகளில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, பின்னர் 2018 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில்தான், ஐதராபாத் போரபண்டா பகுதியில் பதுங்கியிருந்த ராமுலுவை காவல் துறையினர் அதிரடியாக தற்போது கைது செய்துள்ளனர். 

அதே நேரத்தில், “ஏன் அவர் தொடர் கொலைகளில் ஈடுபட்டார்?” என்பதற்கான காரணத்தையும் விசாரணையின் மூலமாக போலீசார் அறிந்துகொண்டனர்.

“விசாரணையில், பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்ட ராமுலுவின் மனைவி, அதே பகுதியைச் சேர்ந்த வேறொருவருடன் கள்ளத் தொடர்பு வைத்து சென்று விட்டதால், அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்து வந்த ராமுலு, அதே கள்ளக் காதலால் பெண்கள் மீது கடும் வெறுப்படைந்து உள்ளார். அதனால், திருமணத்திற்குப் பிறகு, கள்ளக் காதல் உறவில் ஈடுபடும் பெண்களைக் குறிவைத்து, கடத்திச்சென்று கொலை செய்ததாக” அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம், தெலங்கானா மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.