மத்திய அரசின் கலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த  நிபுணர்களும் இடம்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய அரசு அமைத்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இடம்பெறாதது வியப்பளிக்கிறது என அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், “நம் நாட்டின் வளமான மற்றும் மாறுபட்ட கலாச்சார வேர்களைப் பற்றிய நமது புரிதலை ஆழமாக்குவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருந்தாலும், குழு அமைக்கப்பட்டுள்ள விதம் ஆழ்ந்த கவலைக்குரியதாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
தொடர்ந்து, “மத்திய அரசு அமைத்துள்ள குழுவில் தென்மாநிலங்களில் இருந்து, குறிப்பாக புகழ்பெற்ற கடந்த காலத்தையும், பழமையான நாகரிகங்களில் ஒன்றான திராவிட நாகரீகத்தையும் கொண்டுள்ள தமிழகத்திலிருந்து ஒருவர் கூட உறுப்பினராக இடம்பெறவில்லை” என்று சுட்டிக்காட்டிய முதல்வர், கீழடி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் நடந்த தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் மூலம், 6ம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்ற தகவலை அடிக்கோடிட்டார்.

பிரதமர் மோடி- சீன அதிபரின் மாமல்லபுரம் பயணத்தை குறிப்பிட்ட அவர், “இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் எந்தவொரு ஆய்வு நிறுவலும் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு சரியான இடத்தை வழங்காமல் முழுமையடையாது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். இப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் குழுவில் இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு இந்திய தொன்மையை கண்டறியும் குழுவை மாற்றியமைத்து தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான ஆய்வாளர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். தனது கோரிக்கைக்கு விரைவில் பதில் வருமா என்றும் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டின் பன்முக அடையாளத்தையும் - பண்டையத் தமிழ் - திராவிட நாகரிகத்தையும் அவமதிக்கும் எண்ணத்துடன் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ள அந்தக் குழுவில் உள்ள 16 உறுப்பினர்களில், 6 பேர் சமஸ்கிருத மொழியில் புலமைத்துவம் பெற்றவர்கள் என்பது, தமிழ்மொழி மீது மத்திய அரசுக்கு இருக்கும் ஆழமான வெறுப்பைக் காட்டுகிறது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

திராவிட நாகரிகத்தைப் பின்னுக்குத்தள்ளி - சரஸ்வதி ஆறு நாகரீகத்தைப் புகுத்தி - இந்தியக் கலாச்சார வரலாற்றை மாற்றி எழுதி விட மத்திய பாஜக அரசு துடிக்கிறது என்று குற்றம்சாட்டிய அவர், “தற்போது அமைக்கப்பட்டுள்ள கலாச்சார ஆய்வுக் குழுவை உடனடியாக மாற்றி அமைத்து தமிழ்நாடு, தென்னிந்தியா, வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் பட்டியலின, சிறுபான்மை சமூகப் பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில் புதிய குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்” என பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளார்.