“முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும்” என்று, பீகார் பாஜக எம்.எல்.ஏ மிகவும் சர்ச்சைக்குறிய வகையில் பேசி உள்ளது” நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதனால், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகள் இந்த 5 மாநிலங்களிலும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதன் படியே, சில அரசியல் கட்சித் தலைவர்கள், வாய் வந்ததையெல்லாம் பேசி வருகிறார்கள் என்கிற விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில், கடந்த ஒரு மாதமாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த பாஜகவை சேர்ந்த குறிப்பிட்ட சில தலைவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குறிய வகையில் பேசி, பெரும் சர்ச்சைகளிலும் தொடர்ந்து சிக்கி வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது பீகார் மாநில பாஜக சேர்ந்த பிஸ்பி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹரிபூஷன் தாக்கூர், சர்ச்சைக்குரிய வகையில் பேசி, அவர் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார். 

எப்போதும் சர்ச்சைக்குறிய கருத்துக்களை வெளியிடுவதில் பெயர் பெற்றவரான பீகார் பிஸ்பி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பாஜகவைச் சேர்ந்த ஹரிபூஷன் தாக்கூர், கடந்த 25 ஆம் தேதி அங்குள்ள செய்தியாளர்களிடம் பேசும் போது, “கடந்த 1947 ஆம் ஆண்டு பிரிவினையின் போது இஸ்லாமியர்களுக்கு தனி நாடு வழங்கப்பட்டதால், அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். அவர்கள் இந்தியாவில் வாழ்ந்தால், அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக வாழ வேண்டும்.

இஸ்லாமியர்கள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற விரும்புவதாகவும், முஸ்லீம்களின் வாக்குரிமையை பறிக்குமாறு அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று, பேசி ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார்.

இவரின் இந்த பேச்சு, அந்த மாநிலம் முழுவதும் தீயாக பரவிய நிலையில், தற்போது இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால், அவருக்கு எதிராக கடும் கண்னட குரல்கள் எழுந்து உள்ளன. அவருக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்னடங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக அந்த மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறுகையில், “தாக்குரின் கருத்துக்கள் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது” என்று, கூறியுள்ளார்.

அத்துடன், “ஹரிபூஷன் தாக்கூரின் இந்த கருத்துக்களை நாங்கள் ஏற்கனவே விலகிவிட்டோம் என்றும், அவர் ஏன் இதனை சொன்னார் என்று விளக்கம் அளிக்க  அவருக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

இதனால், பாஜகவைச் சேர்ந்த ஹரிபூஷன் தாக்கூருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

முன்னதாக, சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள கோவிந்த்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ சுனில் மணி திவாரி என்பவர், தனது தொகுதி மக்களிடம் பேசும் போது, “யாராவது இந்தியாவில் வாழ வேண்டும் என்றால், அவர் ராதே - ராதே என்று சொல்ல வேண்டும் என்றும், ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் வந்தே மாதரம் சொல்ல வேண்டும்” என்றும், வலியுறுத்தினார்.

“ஏனென்றால், இது பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி அரசு” என்றும், அவர் சுட்டிக்காட்டி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கும், அங்கு கடும் கண்டனங்கள் எழுந்து உள்ளன.