“ஒரு மனைவி, தனது கணவரிடம் செக்ஸ் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தால், அதற்கு களைப்பு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்” என்று,  சர்வே ஒன்றில் ஆண்கள் கூறியுள்ளனர்.

குடும்பம் என்ற அமைப்பு முறையில், கணவன் - மனைவிக்குள் நடக்கும் பல விசயங்கள் தற்போது வீதிக்கு வந்திருக்கிறது என்பது தான் உண்மை.

அத்துடன், கணவன் - மனைவியின் தாம்பத்திய விவகாரம் கூட தற்போது நீதிமன்றங்களின் படி ஏறி, அவைகள் செய்திகளாகவும் வெளி உலகத்திற்கு வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் தான், தேசிய குடும்ப சுகாதார அமைப்பு “ கணவன் - மனைவியின் தாம்பத்தியம்” பற்றி ஒரு சர்வே ஒன்றை நடத்தி உள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், அந்த முடிவுகளை தேசிய குடும்ப சுகாதார அமைப்பு தற்போது அறிக்கையாகவும் வெளியிட்டு உள்ளது. 

அதன் படி, இந்த ஆய்வில் 15 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு தரப்பினரும் கலந்து கொண்டு, தங்களது முடிவுகள் பற்றி கருத்து தெரிவித்து உள்ளனர்.

அதில், “ஒரு மனைவி, செக்ஸ் வேண்டாம் என தனது கணவரிடம் மறுக்கிறார் என்றால், அதற்கு முக்கிய காரணமாக அன்றைய தினம் அந்த மனைவிக்கு அதிகப்படியான உடல் சோர்வு மற்றும் களைப்பு ஏற்பட்டிருக்கும்” என்று, பெருமளவிலான கணவன்கள் கருத்து கூறி உள்ளனர்.

அத்துடன், “3 முக்கிய காரணத்தினால் தாம்பத்தியத்திற்கு மனைவிகள் மறுப்பு தெரிவிக்க கூடும்” என்று, இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 80 சதவீத பெண்கள், கருத்து தெரிவித்து உள்ளனர்.

அதன் படி முதல் காரணம், “கணவருக்கு ஒரு வேளை பாலியல் நோய் இருக்கலாம் அல்லது அந்த கணவன் மற்ற பெண்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கலாம் அல்லது அந்த பெண் அதிக வேலைகள் காரணமாக அதிகமான களைப்புடனோ அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கான மனநிலையில் இல்லாதவராகவோ அன்றைய தினம் இருக்கலாம்” என்றும், பெரும்பாலன பெண்கள் கூறி உள்ளனர்.

பெண்கள் கூறிய இந்த 3 கருத்துக்களையும், ஆய்வில் கலந்துகொண்ட 66 சதவீத ஆண்களும் “ஆம்” என்று, ஒப்புக்கொண்டு உள்ளனர்.

என்றாலும், 8 சதவீத மனைவிகள் மற்றும் 10 சதவீத கணவன்கள், “இந்த 3 காரணங்களால், மனைவி தாம்பத்தியத்திற்கு மறுக்கிறார் என்பதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற கருத்தையும் முன்வைத்து உள்ளனர். 

இந்த ஆய்வானது, கடந்த 2019 ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை அடிப்படையாக கொண்டு, ஆய்வு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இதற்கு முன் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலகட்ட ஆய்வுடன், இந்த ஆய்வை ஒப்பிடும் போது, “பெரும்பாலன மனைவிமார்கள் கூறிய இந்த 3 காரணங்களால், மனைவிகள் தாம்பத்தியத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார் என்பதற்கான அளவீடு பெண்களிடம் 12 சதவீதம் அதிகரித்து இருக்கிறது” என்பது தெரிய வந்திருக்கிறது. 

அதே போல், பழைய ஆய்வுடன் ஒப்பிடும்போது, தற்போது வெறும் “3 சதவீத ஆண்களே, இந்த புதிய ஆய்வின் அளவீட்டில் அதிகரித்து” உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, இந்த ஆய்வின் மற்றொரு முக்கியமான கேள்விக்கு “மனைவியை கணவர் அடிப்பதற்கு நியாயம் உள்ளது” என்று, 44 சதவீத ஆண்களும், 45 சதவீத பெண்களும் நம்புகின்றனர் என்றும், கூறப்பட்டு உள்ளது. தற்போது, இந்த ஆய்வு தொடர்பான முடிவுகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.