கொரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். இத்தகவலை சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது. 

திடீரென்று இந்தியா திரும்பிய, ரெய்னாவின் குடும்ப பிரச்னை காரணமாகவே அவர் நாடு திரும்பினார் என்று கூறப்பட்டது. ஆனால் அதன்பின், அவருக்கு ஒதுக்கப்பட்ட அறை தொடர்பாக அதிருப்தி அடைந்தார் என்று காரணம் செல்லப்படுகிறது. கேப்டன் தோனியுடன் கருத்து மோதலால்தான் விலகினார் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் மெட்ராஸ் சிமெண்ட்ஸ் என்.சீனிவாசன், ‘தலைக்கணம் மிகுந்துவிட்டது’ என்று பெயர் குறிப்பிடாமல் ரெய்னாவைப் பற்றி சொல்லியிருக்கிறார். மேலும், ரெய்னா தான் இழந்ததைப் பற்றி நன்கு உணர்ந்திருப்பார் என்று தெரிவித்திருக்கிறார். எனினும் இதுவரை தன் விலகல் குறித்து எதுவும் பேசாத ரெய்னா, தன் குடும்பத்தினருக்கு நேர்ந்தது பற்றி ட்வீட் செய்துள்ளார்.

மதோபூா் அருகே உள்ள தரியால் கிராமத்தில் அசோக் குமாா் (58) என்பவா், தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். அவரது வீட்டில் கொள்ளையடிப்பதற்காக ஒரு கும்பல் கடந்த ஆகஸ்ட் 19 இரவில் அங்குச் சென்றனா். அப்போது வீட்டில் இருந்த அசோக் குமாா், அவரது தாய் சத்யாதேவி, மனைவி ஆஷா தேவி, மகன்கள் அபின், கௌஷல் ஆகியோரைக் கொள்ளையா்கள் தாக்கினா். அதன் பின்னா் வீட்டில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனா். இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த அசோக் குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றவா்கள் பலத்த காயமடைந்தனா். 

இவர்களில், ரெய்னா தந்தை சகோதரியான ஆஷா தேவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ரெய்னாவின் சகோதரர்களான 32 வயது கெளசல் குமாரும் 24 வயது அபின் குமாரும் இச்சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரெய்னா தகவல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் எழுதியுள்ள ரெய்னா, பஞ்சாப் காவல்துறைக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்மூலம் சுரேஷ் ரெய்னா தெரிவித்திருப்பதாவது:

`பஞ்சாப்பில் என் குடும்பத்துக்கு நேர்ந்தது கொடுமையை விடவும் மேலானது. என் மாமா படுகொலை செய்யப்பட்டுள்ளார். என் அத்தையும் சகோதரர்களும் பலமாகக் காயமடைந்துள்ளார்கள். துரதிர்ஷ்டவசமாக உயிருக்குப் போராடிய என் சகோதரரும் நேற்றிரவு மரணம் அடைந்துள்ளார். என் அத்தை இன்னும் உயிருக்குப் போராடி வருகிறார். உயிா் காக்கும் மருத்துவச் சாதனங்களின் மூலம் அவருக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது.

அன்றிரவு என்ன நடந்தது, யார் செய்தார்கள் என்று இன்று வரை எங்களுக்குத் தெரியவில்லை. இந்த வழக்கைக் கவனிக்குமாறு பஞ்சாப் காவல்துறையிடம் கோரிக்கை வைக்கிறேன். இந்தக் கொடுமையான செயலைச் செய்தவர்கள் யார் என்பதாவது எங்களுக்குத் தெரிய வேண்டும். அந்தக் குற்றவாளிகள் மேலும் குற்றங்கள் செய்யாதவாறு தடுக்கப்படவேண்டும்'

ரெய்னாவின் .இந்த ட்வீட், அவர் மீதான சர்ச்சைக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியாக பார்க்கப்படுகிறது.