“முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்திருப்பதில் சந்தேகம் இருப்பதாகவும்,  இதனால் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்” என்று, ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தான் பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி. அவர் சமீபத்தில் எது பேசினாலும் அது மிகப் பெரிய அளவில் சிர்ச்சைகளுக்கு வித்திட்டுவிடும். அந்த அளவுக்கு இந்திய அரசியலில் மிக முக்கியமானவராக வலம் வருபவர் தான் பாஜகவின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி.

அதாவது, இந்தியாவின் முப்படைகளுக்குமான தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே திடீரென்று வெடித்து சிதறியதில், பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயரிழந்தனர்.

முப்படை தலைமை தளபதியின் எதிர்பாராத இந்த திடீர் மரணம், இந்தியா முழுமைக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பல்வேறு தலைவர்களும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். இவற்றுடன், பல உலக நாட்டுத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும் “விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து குறித்து” மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

அப்போது, முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும்,  ராஜ்நாத் சிங் கூறினார்.

அத்துடன், இந்த கோர விபத்தானது “மோசமான வானிலையால் விபத்தால் நிகழ்ந்ததா? அல்லது தொழில் நுட்பக் கோளாறால் இந்த விபத்து நடந்ததா? என்பது குறித்தான இன்னும் உறுதியான தகவல்கள் இதுவரை தெரிவிக்கவில்லை.

இதன் காரணமாக, இந்த கோர விபத்து பற்றி விமானப் படை விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறது. நாடாளுமன்றத்தில், பாதுகாப்ப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் இதனை உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் தான், “இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக” பாஜகவின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி புதிய சந்தேகத்தை எழுப்பி உள்ளார்.

முக்கியமாக, “முன் எப்போதும் இல்லாத வகையில் எல்லைகளில் சீனாவின் ஊடுருவல் குறித்து மிக கடுமையான கருத்துகளை முன்வைத்து வந்தார் பிபின் ராவத். எனவே தான், பிபின் ராவத் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி ஊடகத்தில் பேட்டி அளித்து உள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள சுப்பிரமணியன் சுவாமி, “சைபர் வார்ஃபேர் இந்த விபத்தின் பின்னணியில் இருந்திருக்கலாம் என்றும், லேசர் மூலமாக தொழில் நுட்ப கோளாறுகளை ஏற்படுத்தி இருக்கலாம்” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அதன் தொடர்ச்சியாக, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பிபின் ராவத் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பி” ஒரு கருத்தையும் பகிர்ந்து உள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. 

முக்கியமாக, “ராணுவம் விசாரணை நடத்துவதை விட, இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்” என்றும், சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தி உள்ளார்.