ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கொனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற பயணிகள் மீது எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது. நேற்றிரவு இந்த விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, “கவுகாத்தி விரைவு வண்டியில் பயணித்த 6 பேர்,  சங்கிலியை பிடித்து இழுத்ததால் அந்த ரெயில் பாதியில்  நிறுத்தப்பட்டது. உடனே 6 பயணிகளும் ரெயிலில் இருந்து கீழே குதித்து தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். 

இந்நிலையில் அப்போது எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது எதிர் திசையில் வந்த கொனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது அதிகவேகமாக மோதியதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வருத்தம் தெரிவித்துள்ளார். மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என போலீஸ் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர்  உத்தரவிட்டுள்ளார்.