“ஆபாசப் படங்களை தயாரித்ததில் எனது கணவருக்கு துளியும் சம்பந்தமில்லை” என்று, நடிகை ஷில்பா ஷெட்டி போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த நடிகை ஷில்பா ஷெட்டி, தமிழில் பிரபுதேவா இரட்டை வேடங்களில் நடித்த “மிஸ்டர் ரோமியோ” படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்க அறிமுகமானார். 

முக்கியமாக, நடிகர் விஜய் மற்றும் ஜோதிகா நடித்த “குஷி” திரைப்படத்தில் “மெக்கரீனா” என்ற பாடலுக்கு நடனம் ஆடி, தமிழ் ரசிகர்கள் மனதில் கனவு கண்ணியாக மாறிப்போனார்.

ஆனாலும் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் உள்ள பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை ஷில்பா ஷெட்டி, கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரான ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ரா தம்பதிக்கு  ஒரு மகன் ஒரு மகள் என 2 குழந்தைகள் உள்ளனர்.

இப்படியான சூழ்நிலையில், கடந்த 20 ஆம் தேதி, நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, “ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில்” மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 

“ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா, அவற்றை செல்போன் செயலியின் மூலமாக விநியோகம் செய்ததாகவும், இது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கில் ராஜ் குந்த்ரா தான் முக்கிய குற்றவாளி என்று மும்பை போலீசார் தற்போது கண்டுப்பிடித்து, அவரை கைது செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

பின்னர், கைது செய்யப்பட்ட நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ்குந்த்ராவை, மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்குப் பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவருக்கு வரும் 27 ஆம் தேதி வரை போலீஸ் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 

அதன் படி, ராஜ்குந்த்ராவிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே போல், முன்னதாக இந்த ஆபாசப் படங்கள் வழக்கில் ஆண் மற்றும் பெண் மாடல்கள், 9 தயாரிப்பாளர்களை மும்பை போலீஸ் கைது செய்திருந்திருந்தனர். இந்த வழக்கில், உமேஷ் என்ற நபர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் தன்,  “என் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு, அந்த ஆபாசப் படங்களின் தயாரிப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று, நடிகை ஷில்பா ஷெட்டி போலீசாரின் விசாரணையின் போது கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக, நடிகை ஷில்பா ஷெட்டியிடம் போலீசாரின் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்களிடம் விளக்கம் அளித்த நடிகை ஷில்பா ஷெட்டி,
“என் கணவர் ஒரு அப்பாவி என்றும், அவருக்கும் ஆபாசப் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றும், அவர் கூறியிருக்கிறார். 

மேலும், “இந்த விவகாரத்தில் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்றும், என் கணவர் ராஜ் குந்த்ரா நிர்வகிக்கும் செயலியில் இருக்கும் படங்கள்யாவும் ஆபாசப்படங்கள் இல்லையென்றும், அந்த படங்கள் எல்லாம் ஓடிடி தளங்களில் இருப்பது போல ‘பாலுணர்வை தூண்டும் வகையிலான திரைப்படங்கள் தான்” என்றும், ஷில்பா ஷெட்டி விளக்கம் அளித்திருக்கிறார்.

அத்துடன், “ராஜ் குந்த்ராவின் செயலியை நிர்வகித்த நிறுவனத்திலிருந்து சமீபத்தில் தான் ஷில்பா ஷெட்டி விலகியிருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் தான், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் என்றும் கூறப்பட்டது.