சொகுசு கப்பலில் நள்ளிரவில் நடந்த போதை பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட 13 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோரை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

மும்பையில் இருந்து கோவாவிற்கு ஆடம்பரமான சொகுசு கப்பல் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. 

அதாவது, சொகுசு கப்பல்களை வைத்திருக்கும் சில நிறுவனங்கள், அடிக்கடி பணக்காரர்களுக்காக பல்வேறு வகையான கடல் பயண சுற்றுலாக்களை நடத்துவது வாடிக்கையாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதிலும் சில தனியார் அமைப்புகளும், சொகுசு கப்பல்களை வாடகைக்கு பெற்று கடல் சுற்றுலாக்களை நடத்துவதுண்டு. 

அந்த வகையில் தான், மும்பையில் இருந்து கோவாவுக்கு 3 நாள் சுற்றுலாவாக கார்டிலியா என்ற சொகுசு கப்பலில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக, 6 பேர் இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தனர். இணையதளம் வாயிலாகச் சுற்றுலாப் பயண நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

இந்த சொகுசு கப்பலில் போதை பாரட்டி நடப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்த தகவலின்படி, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வாங்கடே தலைமையிலான அதிகாரிகள், மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் சாதாரண பயணிகள் போன்று டிக்கெட் எடுத்து பயணம் செய்தனர்.

இப்படியாக, மும்பையில் இருந்து அக்டோபர் 2 ஆம் தேதியான நேற்றைய தினம் புறப்பட்டு அந்த கப்பல், அரபிக் கடலில் 2 இரவுகள் கழித்துவிட்டு, கோவா வழியாக மீண்டும் அக்டோபர் 4 ஆம் தேதி காலை மும்பை திரும்பும் வகையில் அந்தச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

நாடு முழுவதிலும் இருந்து 800 க்கும் மேற்பட்டவர்கள் அந்த கப்பலில் சுற்றுலாச் செல்ல முன்பதிவு செய்திருந்தனர்.

இந்த கப்பல் சுற்றுலாவில் பல கோடீஸ்வரர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மாடலிங் உலகைச் சேர்ந்தவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பயணம் செய்தனர். 

இந்த சூழலில் தான், போதைப் பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த 20 அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள் போல மாறுவேடத்தில் அந்தக் கப்பலில் சென்றனர். 

அவர்கள் கப்பலில் உள்ள பயணிகளைக் கண்காணித்தபடி இருந்த நிலையில், நேற்றிரவு கப்பலில் நடன விருந்து தொடங்கியது.

அப்போது, அவர்களும் பயணிகளும் உற்சாகமாக நடனமாடினார்கள். அந்த சமயத்தில் போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை மாறுவேடத்தில் இருந்த காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

உடனடியாக அலெர்டான போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அதை யார் விநியோகம் செய்வது என்பதை மாறுவேடத்தில் இருந்தபடியே ஆய்வு செய்தனர். சுமார் 7 மணி நேரம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அந்த கொகுசு கப்பல் முழுவதையும் ஒரு இடம் கூட விடாமல் சோதித்தனர். அப்போது 8 இளைஞர்கள் போதைப் பொருட்களை தொழிலதிபர்களின் மகன்கள், மகள்களுக்குக் கொடுப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியதில் இந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள், போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் என மொத்தமாகப் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் உள்பட  13 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அத்துடன், பிடிப்பட்ட அனைவரிடமும் கிட்டதட்ட 20 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. 

இந்த நிலையில், ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தற்போது கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆர்யன் கான் உள்பட 3 பேரை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அழைத்துச் சென்று உள்ளனர். இச்சம்பவம், இந்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.