நிறத்தை வைத்து கிண்டல் செய்த ரசிகனுக்கு, நடிகர் ஷாருக்கான் மகள் மகள் சுஹானா கான், “நிற அரசியல்” பேசி வெளுத்து வாங்கியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர்கள் நடிகைகள் மற்றும் அவர்களது வாரிசுகளை எப்போதும் ட்ரோல் செய்வதையே சிலர் தங்களது அன்றாட வேலையாகச் செய்து வருகிறார்கள். 

இப்படி பிரபலங்களைப் பற்றி விமர்சிப்பதற்கு என்றே, இணையத்தில் ஒரு கும்பல் உலா வந்துகொண்டு இருக்கிறது. இந்த நெட்டிசன்களைப் பொறுத்தவரை, தாங்கள் விமர்சிக்கும் பிரபலங்கள் மற்றும் பிரபலங்களின் குழந்தைகளுக்கு ஒரு வயசா? அல்லது 70 வயசா? என்றெல்லாம் பார்ப்பதில்லை. தன் மனம் போன போக்கில் அவர்கள் போகிற போக்கில் விமர்சனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.

அப்படி தான், நடிகை கரீனா கபூரின் குழந்தை தைமூரையே அந்த நெட்டிசன்கள் விட்டு வைக்காமல் விமர்சனம் செய்து வந்தனர். அந்த வகையில், தற்போது இளமை வயதில் வாலிப பருவத்தில் இருக்கும் பிரபல நடிகர் ஷாருக்கான் மகளையும், அந்த விஷமிகள் விட்டு வைக்கவில்லை.

இந்தி சினிமா உலகான பாலிவுட்டின் பாட்ஷா என்று அன்போடு அழைக்கப்படும் பிரபலமான நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கானுக்கு, தற்போது 20 வயது ஆகிறது. தற்போது, சுஹானா கான் தனது இந்த வயதிலேயே பாலிவுட்டின் மாடலிங் துறையில் பிரம்மதமாக கலக்கி வருகிறார். 

மேலும், தனது தொழில் சார்ந்த மாடலிங் சம்மந்தமாக சுஹானா கான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களைப் பதிவிட்டு, விளம்பரப்படுத்தி வருகிறார். இதனால், அவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் ஒரு மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். இதனால், இன்ஸ்டாகிராமில் அவர் என்ன பதிவு போட்டாலும், எந்த புகைப்படம் போட்டாலும் வைரலாகும்.

இந்நிலையில், நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர், சுஹானா கான் நிறம் பற்றி விமர்சித்து உள்ளனர்.

அதாவது, “சுஹானா கான் நிறம் டார்க்காக இருப்பதாகவும், கருப்பாக இருப்பதாகவும்” கூறி கிண்டல் செய்து உள்ளனர். இப்படி, பல முறை பல தருணங்களில் சுஹானா கானுக்கு இதுபோன்ற விமர்சனங்கள் வந்தது உண்டு. ஆனால், இது போன்ற ட்ரோல்களை கண்டு கொள்ளாமல் இருந்து வந்த சுஹானா கான், தற்போது தனது ஒட்டு மொத்த கோபத்தையும் இறக்கி வைக்கும் வகையில், தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்து உள்ளார்.

அதன்படி, அவர் காட்டமாக அளித்துள்ள பதிலில், “இப்போது பாலிவுட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் போய்விட்டு இருக்கு. இந்த நேரத்துல நான் கருப்பாக இருப்பது தான் உங்களுக்கு முக்கியமா?” என்று, காட்டமாகவே பதில் கேள்வி கேட்டுள்ளார்.

அத்துடன், “இது தான் உங்களுக்குப் பிரச்சனை என்றால், இதையும் சரி செய்து தான் ஆக வேண்டும் என்றும், நான் 12 வயது குழந்தையாக இருக்கும் போதில் இருந்தே, எனது நிறத்தை இப்படி சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள்” என்றும், அவர் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்தியில் கருப்பு என்றால், காலா என்று அர்த்தம். இந்த கருப்பு தான், இந்தியாவின் நிறம். எங்க கிட்ட அதிகமா மெலனின் இருக்கு. ஆனால், இந்தியர்களே இப்படி சக இந்தியர்களை நிறத்தை வைத்து வேறுபாடு படுத்திப் பார்த்தால் நன்றாகவா இருக்கிறது?” என்று, தனது பாணியில் அவர் நிற அரசியல் பேசி தன்னை விமர்சித்த ரசிகனை வெளுத்து வாங்கி உள்ளார்.

“நீங்கள் 5.7 அடி உயரமாகவும், வெள்ளையாகவும் இருந்தால் கூட அழகு கிடையாது. 5.3 உயரத்துடன் அடர் நிறத்தில் இருக்கும் நான் ரொம்பவே சந்தோஷமா இருக்கிறேன். அதனால், நீங்களும் சந்தோஷமா இருங்கள்” என்று, இறுதியாக மிகுந்த கவனத்துடன், தனது பதிலை அவர் பதிவிட்டுள்ளார். 

நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கானின் இந்த பதிவுக்கு, நடிகை ஆலியா பட் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் பாராட்டு தெரிவித்தும், வாழ்த்துக்கள் கூறியும் வருகின்றனர். அத்துடன், “சுஹானா #endcolourism” என்று குறிப்பிட்டு, பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இதன் காரணமாக, நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கானின் இந்த பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது.