உலகம் முழுவதும் நிலவிவரும் உலகளாவிய பெருந்தொற்று நோயான கொரோனா வைரஸ், எந்தவொரு துறையையுமே விட்டுவைக்கவில்லை. நிதி முதல் விளையாட்டு வரை உலகின் அனைத்தின் துறைகளில் கொரோனாவால் வெவ்வேறு வடிவங்களில், விதங்களில் தாக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, தொற்று காரணமாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. 

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது நாடான இந்தியாவில், நடைபெறவிருந்த ஐபிஎல் உள்ளிட்ட அனைத்தும் கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரோனா இப்படி அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் மற்றும் புதிய போட்டிகளை எப்படி நடத்துவது எனத் தெரியாமல் பிசிசிஐ குழம்பியுள்ளது. இன்னொருபக்கம் கொரோனாவும் தனது தாக்கத்தைக் குறைப்பதாகத் தெரியவில்லை. எதிர்கால கிரிக்கெட் தொடர்கள் குறித்தும் பலகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது பிசிசிஐ.

இந்நிலையில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை வளர்க்கவும், அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவும், பொதுமேலாளர் சபா கரீம் எந்த ஆக்கர்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அவரை பதவி விலகுமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளதாக கடந்த சில வாரங்களாகத் தகவல்கள் சொல்கின்றன. இதற்குப் பின்னணியாக, அவர் சரியாகத் திட்டமிடல் எதையும் முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக கொரோனா தொற்றுக் காலத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை எவ்வாறு நடத்துவது, மாற்று வழியில் கிரிக்கெட் போட்டிகளை எவ்வாறு நடத்தலாம், வீரர்களின் பயிற்சி, மாற்றுத்திட்டம் என எதைப்பற்றியுமே சபா கரீம் பொதுமேலாளராக இருந்து கொண்டு ஆலோசிக்கவில்லை எனவும் அது குறித்துத் திட்டமிடல்களை முன்வைக்கவும் இல்லை எனவும் பிசிசிஐ குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில், இப்போது சபா கரீம் பிசிசிஐயின் பொதுமேலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை நிர்வாகிகளுக்கு சபா கரீம் அனுப்பி வைத்தார். இந்தியா கிரிக்கெட் அணியில் முன்னாள் வீரராக இருந்த சபா கரீம் கடந்த கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிசிசிஐ அமைப்பின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டார். 54 வயதாகும் சபா இந்தியாவிற்காக இதுவரையில் 34 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சிறிது காலத்துக்கு முன்னர்தான், பிசிசிஐ நிர்வாகப் பொறுப்புக்கு சவுரவ் கங்குலி உள்ளிட்டவர்கள் புதிதாக வந்திருந்தனர். இதனால் அணியில் சில மாற்றங்களைத் தரும் என்றும், நிர்வாகத்தில் வேறு ஏதேனும் மாற்றங்களெல்லாம் ஏற்படும் என்றும் அந்த நேரத்தில் கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்திருந்தனர். ஆனால் ஆறேழு மாதங்களாக எந்த மாற்றமும் ஏற்படாத காரணத்தினால், தலைமை செயல் அதிகாரியாகப் பதவி வகித்து வந்த ராகுல் ஜோரி கடந்த வாரம் பதவி விலகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவரது பதவி விலகல் பிசிசிஐ உடனடியாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. 

இதற்கிடையில், பிசிசிஐ நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதால்தான் அவர் பதவி விலகியதாகக் கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து மட்டும், இரு தரப்பிலிருந்தும் எந்தக் கருத்தும் இன்னமும் உறுதி செய்யவில்லை. ஆனால் பொது மேலாளர் சபா க்ரீம் பதவி விலக வேண்டும் என்று நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதாக நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இந்நிலையில் நேற்று பதவி விலகல் கடிதத்தை நிர்வாகிகளுக்குச் சபா கரீம் அனுப்பி வைத்திருந்தார்.

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான இவர் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 34 ஒருநாள் மற்றும் 120 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில், போட்டிகள் மற்றும் பயிற்சிக்காக இளஞ்சிவப்பு பந்துகளை போதுமான அளவுக்கு வாங்கவில்லை என்று கரீம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதனை பிசிசிஐ தலைவர் கங்குலி வெளிப்படையாகவே கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்க விஷயம்.

 

- பெ.மதலை ஆரோன்.