பீகார் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையை, கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்டார்.

ஏற்கனவே பாஜக தனது தேர்தல் வாக்குறுதியாக கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று கூறியிருக்கிற நிலையில், இன்று ராஷ்டிரிய ஜனதா தள் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில், 'ஆட்சி அமைக்கும் பட்சத்தில் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பத்து லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்படும். மேலும் ஒப்பந்தத் தொழிலாளர் முறை முழுவதுமாக நீக்கப்படும். 
அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை எழுதுவதற்கு தேர்வுக் கட்டணம் ரத்து செய்யப்படும். அரசுப் பணிக்கான தேர்வு எழுதும் மையங்களுக்கு செல்வதற்கு போக்குவரத்துக் கட்டணம் கிடையாது' என்று வாக்குறுதிகளை அளித்துள்ளார் தேஜஸ்வி யாதவ்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, “நான் 10 லட்சம் வேலைகளுக்கு பீகார் மக்களிடம் உறுதியளிக்கிறேன். வாக்குறுதியின் பொருட்டு ஒரு கோடி வேலைகளையும் என்னால் உறுதியளிக்க முடியும்.. ஆனால் நான் அதைச் செய்யவில்லை, ஏனெனில் இப்போது வாக்குறுதியாக இருக்கும் இது, அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் ஒரு யதார்த்தமாக மாறும். நாட்டில் முதல் தடவையாக ஒரே நேரத்தில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். மக்களை ஏமாற்றுவதற்காக நடைமுறைக்கு சாத்தியமில்லாத கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நான் அளிக்க மாட்டேன்'. மேலும், 'நாங்கள் எங்கிருந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று சிலர் கேலி செய்கிறார்கள். நாம் அரசு வேலைகள் பற்றி பேசுகிறோம். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஜூனியர் பொறியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்புகள் பீகார் அரசில் தேவையாக உள்ளன. மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு நமக்கு அதிகமான போலீசாரும் தேவை. மணிப்பூர் ஒரு சிறிய மாநிலம், ஆனால் பீகாரை விட அங்கே அதிக போலீசார் இருக்கிறார்கள்'. 'பாஜக 19 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளது பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார்? ஏற்கனவே முதல்வராக இருக்கும் நித்திஷ் குமார் தன்னால் அதிக வேலை வாய்ப்புகளை வழங்க முடியவில்லை என்று ஒப்புக் கொண்டுவிட்டார். இந்நிலையில் 19 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கப் போவதாக பாஜக எப்படிக் கூற முடியும்? இவர்கள் யாரை முட்டாள் ஆக்குகிறார்கள்?'
 என்று கூறியுள்ளார் தேஜஸ்வி.