பஸ் ஏற்ற அழைத்துச் செல்லப்பட்ட உறவுக்கார பெண்ணை வனப்பகுதிக்குள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த உறவினர் ஒருவர், அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து உள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுகா அடூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்டது மகரவள்ளி கிராமத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அங்குள்ள தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா சிருதோனி கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், அங்குள்ள மகரவள்ளி கிராமத்தில் வசித்து வரும் தனது உறவினரான 26 வயதான எல்லப்பா வீட்டிற்கு வந்து உள்ளார். அங்கு, தனது உறவினர்கள் சிலரை சந்தித்து விட்டு, அவர் ஊர் திரும்புவதற்காக ஆயத்தமாக உள்ளார்.

அப்போது, அந்த பெண்ணின் உறவினர் மகரவள்ளி கிராமத்தில் இருந்து, பஸ் ஏற்றி விடுவதற்காக பக்கத்து ஊரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு எல்லப்பா சென்று உள்ளார். ஆனால், தனது உறவுக்கார பெண்ணை அவர் பேருந்து நிலையம் அழைத்துச் செல்லாமல், அந்த பெண்ணை அந்த பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் பொய் சொல்லி அழைத்துச் சென்று உள்ளார். அந்த வனப்பகுதிக்குள் சென்றதும், ஆட்கள் நடமாட்டம் யாரும் இல்லாததை உறுதிப்படுத்திக்கொண்ட 26 வயதான எல்லப்பா, தனது உறவுக்கார பெண்ணான அந்த 48 வயது பெண்ணை, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். ஆனால், இதற்கு அந்த பெண் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனாலும், அதையும் மீறி அந்த நபர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். 

அதன் பிறகு, “உன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன்” என்று, அந்த பெண் மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால், பயந்து போன உறவினர் எல்லப்பா, “இந்த பெண்ணை உயிருடன் விட்டால் நம்மை போலீசில் காட்டி கொடுத்து விடுவார்” என்று, பயந்து போய் அந்த பயத்திலேயே தனது உறவுக்கார பெண்ணை, அங்கேயே கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்து உள்ளார் எல்லப்பா. இதையடுத்து, எல்லப்பா அங்கிருந்து தப்பிச் சென்றார்.

அதன் தொடர்ச்சியாக, மகரவள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள வனப் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் ரத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதாக அந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த அடூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா சிருதோனி கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் தான் இவர் என்பதையும், போலீசார் கண்டுபிடித்தனர். 

அத்துடன், படுகொலை செய்யப்பட்ட பெண், அந்த பகுதியில் உள்ள மகரவள்ளி கிராமத்திற்கு வந்து சென்றதும், அந்த கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பா அந்த பெண்ணின் உறவினர் என்பதும் தெரிய வந்தது. இதனால், எல்லப்பாவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார், எல்லப்பாவை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.