“மோடி ஆட்சி இருக்கும் வரை வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட தயார்!” விவசாயிகள் அமைப்பு தலைவர் அறிவிப்பு..
By Aruvi | Galatta | Mar 11, 2021, 11:00 am
“மோடி ஆட்சி இருக்கும் வரை வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட விவசாயிகள் தயாராக இருப்பதாக” விவசாய அமைப்பு தலைவர்களில் ஒருவரான நரேந்திர திகாயத் தெரிவித்து உள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 100 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதாவது, கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி முதல் டெல்லி எல்லையில் முற்றுகையிட்டு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராடி வருகிறார்கள். டெல்லியில் நிலவி வரும் கடும் குளிர், மழை, என அனைத்தையும் எதிர் கொண்டு, அங்குள்ள திக்ரி, காஜிபூர், சிங்கு எல்லைகளில் டிராக்டர்களை வீடுகளாக மாற்றித் தங்கி சமைத்து சாப்பிட்டு மத்திய அரசுக்கு எதிரான தங்களது போராட்டை நடத்தி வருகிறார்கள்.
இவற்றுடன், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டிராக்டர் பேரணி, சக்கா ஜாம் என்று, பல்வேறு கட்ட போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறார்கள்.
அதே நேரத்தில், விவசாய சங்கங்களுடன் இது வரை 11 கட்ட பேச்சு வார்த்தையை மத்திய அரசு நடத்தியிருக்கிறது. ஆனால், அனைத்து கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்து போனது. அத்துடன், விவசாய சட்டங்களில் திருத்தம் மட்டுமே செய்ய முடியும் என்றும், அவற்றை, திரும்ப பெற முடியாது என்றும், மத்திய அரசு திட்டவட்டமாகப் பேச்சு வார்த்தையின் போது தெரிவித்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இதன் காரணமாக, போராட்டத்தை கை விடாமல், தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விவசாய அமைப்பு தலைவர்களில் ஒருவரான நரேந்திர திகாயத், “கடந்த காலங்களில் நடந்த போராட்டங்களை பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தி ஒன்றுமில்லாமல் செய்தது போல், விவசாயிகளின் போராட்டத்தையும் அழித்து விட முடியும் என அரசு தவறாக நினைக்கிறது” என்று, கவலைத் தெரிவித்துள்ளார்.
“அரசு சில சிறிய போராட்டங்களை மட்டுமே எதிர்கொண்டிருக்கிறது என்றும், அவற்றைத் தனது தந்திரங்கள் மூலம் அழித்தும் இருக்கிறது என்றும் குறிப்பிட்ட அவர், ஆனால் கடந்த 35 ஆண்டுகளாக நாங்கள் போராட்டத்தை ஒரு பகுதியாகவே கொண்டுள்ளோம் என்றும், இந்த போராட்டத்தை எந்த வகையிலும் அவர்களால் நசுக்க முடியாது” என்றும், உறுதிப்படத் தெரிவித்தார்.
முக்கியமாக, “3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்கிற எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியைத் தொடர உள்ள நிலையிலும், அது வரை எங்களாலும் போராட்டத்தைத் தொடர முடியும் என்றும், அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என்றும், அவர் சூளுரைத்தார்.
“எங்கள் கோரிக்கை நிறைவேறாமலோ அல்லது எதிர்காலத்தில் பார்க்கலாம் என்ற உறுதியின் பேரிலோ, பாதியளவு ஏற்கப்பட்டு ஒப்பந்தம் போட்டாலோ போராட்டக் களத்தை நாங்கள் காலி செய்ய மாட்டோம்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
“பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் தான் கொள்முதல் செய்யப்படும் என்று அரசு கூறுகிறது என்றும், அப்படியென்றால் அதை எழுத்துப்பூர்வமாக அளிப்பதற்கு ஏன் அரசு மறுக்கிறது என்றும், கியாஸ் சிலிண்டர்களுக்கு மானியம் கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதுவும் இப்போது கொடுப்பது இல்லை” என்றும், அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.