பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுமியை நிர்வாணமாக்கி, அவரையும் அவரின் தாயாரையும் கொடூர கும்பல் ஒன்று கடுமையாகத் தாக்கி உள்ளது கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் பச்சீவர் கிராமத்தைச் சேர்ந்த மால்பூரா என்ற பெண், தனது 17 வயது மகளுடன் வசித்து வந்தார்.

அப்போது, அந்த 17 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அனுப்பி வைத்திருக்கிறார்.

இதில், கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிறுமியை பார்த்து, அவரது தாயார் மால்பூரா கண்ணீர் விட்டுக் கதறி அழுதுள்ளார். அத்துடன், துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார். 

இது தொடர்பாக, அவரது தாய் மால்பூரா, தனது மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தொடர்பாக, அங்குள்ள காவல் நிலையத்தில் கடந்த மாதம் 15 ஆம் தேதி புகார் அளித்தார். 

அப்போது, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அந்த பெண்ணிடம் கூறி அனுப்பி விட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது தாயாராயும் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரின் உறவினர்கள் அழைத்துச் சென்று உள்ளனர்.

அவர்களை நம்பி சென்ற தாய் - மகள் இருவரையும், சம்மந்தப்பட்ட இளைஞரின் உறவினர்கள் 3 பெண்கள் உட்பட மொத்தம் 5 பேர் சேர்ந்து மிக கடுமையாகத் தாக்கி உள்ளனர். 

அத்துடன், கொடூரத்தின் உச்சமாக, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த 17 வயது சிறுமியை நிர்வாணமாக்கி மீண்டும் கொடூரமான முறையில் அவரது தாயார் முன்னிலையிலேயே தாக்கியதோடு, அதனை அவர்கள் வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டனர்.

இதனையடுத்து, அந்த சிறுமியை நிர்வாணப்படுத்தி தாக்கும் அந்த வீடியோவை, அவர்கள் துளியும் இறக்கம் இல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு உள்ளனர். 

இதனால், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவு பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் கடும் கண்டன குரல்கள் எழுந்தன.

இது தொடர்பான வழக்கு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு, இந்த வழக்கில் தொடர்புடைய 3 பெண்கள் உட்பட மொத்தம் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட தாயும், மகளும் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, அங்கு தொடர்ந்து 
சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், போலீசார் இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட நபர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பலமுறை அவர் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களைத் தொடர்ந்து கொடுத்து வந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது. 

குறிப்பாக, உயர் சாதி ரீதியான தாக்குதலுக்கும் அந்த சிறுமி ஆளாகி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, இது போன்ற குற்றச் சம்பவங்கள் பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் விதமாகவும், மாநிலத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருப்பதாகவும் வேதனையும், கவலையும் தெரிவித்தார்.