சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

மத்தியப் பிரதேசம் - ராஜஸ்தான் மாநில எல்லைகளுக்கு இடையில் அமைந்துள்ள கலசியா கிராமத்தில், 100 க்கும் மேற்பட்டவர்கள் கையில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்துள்ளனர். அந்த கிராமத்தில், மிக சொற்பமான வீடுகளே இருந்ததால், அந்த கிராமத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் என 38 பேரை அங்கிருந்து கடத்திச் சென்று உள்ளனர்.

அதாவது, மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லம் மாவட்டத்தில் அமைந்து உள்ள கலசியா கிராமத்தில் வசிக்கும் மக்கள், சுற்றுவட்டார கிராமத்தை ஒப்பிடும் போது ஓரளவுக்குச் சற்று வசதி வாய்ப்பாக இருந்துள்ளனர். 

இதனால், அந்த கிராமத்தின் அருகில் இருக்கும் அடுத்த மாநில எல்லைப் பகுதியான ராஜஸ்தான் மாநிலத்தின் ஜல்வார் மாவட்டத்தின் பமெந்தெவ்ரியா, ஹஜ்தியா கிராம எல்லையில் டெண்ட்கள் அமைத்து வசிக்கும் பழங்குடியினர் சிலர், கலசியா கிராமத்திற்குள் புகுந்து அவர்களது இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து திருடிச் சென்று வந்துள்ளனர். 

இதனால், கடந்த சில முறை குறிப்பிட்ட அந்த கிராம மக்களை கலசியா கிராமத்தினர் முதலில் எச்சரித்து அனுப்பி உள்ளனர். ஆனால், கலசியா கிராமத்தினர் உடைமைகள் திருட்டுப் போவது மட்டும் நிற்காமல், அது தொடர் கதையாகவே நடந்திருக்கிறது. 

இந்த நிலையில், பொறுமை இழந்த கலசியா கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் படை திரண்டு, நாட்டுத் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன், பேருந்து, கார் உள்ளிட்ட பல்வேறு வதமான வாகனங்களில் குறிப்பிட்ட அந்த பழங்குடியினர் வசிக்கும் கிராமத்திற்குள் அதிரடியாக நுழைந்து உள்ளனர்.

அப்போது, அந்த கிராமத்தில் ஆண்கள் யாரும் இல்லாத நிலையில், அந்த கிராமத்தில் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர்.

இதனால், இன்னும் ஆத்திரமடைந்த அவர்கள், அந்த கிராமத்தில் உள்ள இளம் வயது பெண்கள் மற்றும் குழந்தைகள் என கிட்டத்தட்ட 38 பேரை தங்களது பேருந்தில் கத்தி முனையில் கடத்தி, அருகில் உள்ள எல்லைப் பகுதியான மத்திய பிரதேசத்தில் இருக்கும் தங்களின் கிராமத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். 

ஆனால், அதற்குள் அந்த பகுதியைச் சேர்ந்த போலீசாருக்கு இந்த கடத்தல் பற்றிய தகவல் புகராக சென்றுள்ளது. இதனால், பதறிப்போன அந்த பகுதி போலீசார், பெண்களைக் கடத்திச் சென்ற அவர்களது வாகனத்தைத் துரத்திச் சென்றனர். இதனால், பதறிப்போன கலசியா கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள், நான்கு புறமும் தெறித்து ஓடினார்கள். இதன் காரணமாக, கடத்தப்பட்ட பெண்கள், குழந்தைகள் என 38 பேரும் சென்ற பேருந்தை அப்படியே விட்டு விட்டு சென்றுவிட்டனர். இதனையடுத்து, கடத்தப்பட்ட 38 பேரையும் போலீசார் அதிரடியாக மீட்டனர். 

மேலும், கடத்தல்காரர்கள் பெரும்பாலும் தப்பிச் சென்ற நிலையில், காரில் சென்ற 6 பேரை மட்டுமே, போலீசார் துரத்திச் சென்று அதிரடியாகக் கைது செய்தனர். அத்துடன், தப்பி ஓடிய மற்ற அனைவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

முக்கியமாக, கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்தும் ஒரு நாட்டுத் துப்பாக்கி, துப்பாக்கி குண்டுகள், வாள், கத்திகள், லத்திகள், இன்னும் பிற கூர்மையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக அந்த பகுதியின் காவல் துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பேருந்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.